
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான மோதலில் உயிர்ப்பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இஸ்ரேல் பகுதியில் இதுவரையில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மூவர் குழந்தைகள். ஈரான் பகுதியில் 78 பேர் மரணமடைந்துள்ளனர்.
நேற்று ஓர் இரவில் மட்டும் ஈரானின் 80 இலக்குகளைத் தாக்கியதாகக் கூறிய இஸ்ரேல் அவற்றில் ஆயுதக் கிடங்குகளும், அணு ஆயுத சோதனை நிலையங்களும் அடங்கும் எனத் தெரிவித்தது. இராணுவ நிலைகள், ஆயுதக் கிடங்குகள் அருகில் வசிக்கும் ஈரானிய மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்தது.
ஈரானின் அயோத்துல்லா ஆட்சியின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு இலக்கையும் தாக்கி அழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு காணொலி அறிவிப்பு ஒன்றின் வழி அறிவித்தார்.
இன்னொரு பக்கத்தில் அணுஆயுதத் தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி அமெரிக்கா ஈரானை வற்புறுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களை தான் அங்கீகரிக்கவில்லை என அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தாலும், பின்னணியில் அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாகவே கருதப்படுகிறது.