சென்னை – நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கை வருகையை இரத்து செய்தது குறித்து பதிலளித்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை “பல்வேறு தமிழக அரசியல்வாதிகளின் தேவையற்ற நெருக்குதல் காரணமாகத்தான் ரஜினி தனது வருகையை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று சாடியிருக்கிறது.
ஒரு சிலர் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக சமூக நோக்கம் கொண்ட ஒரு செயலுக்கு எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது வருத்தத்தை அளிப்பதாகவும், ஞானம் அறக்கட்டளை தெரிவித்திருக்கின்றது.
ரஜினிகாந்த் நடிக்கும், எந்திரன் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான லைக்கா நிறுவனத்தின் அறக்கட்டளை அமைப்புதான் ஞானம் அறக்கட்டளை. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா பெயரில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளைதான் இலங்கையில் 150 வீடுகளைக் கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த ரஜினிகாந்த் பின்னர் தமிழ் நாட்டில் எழுந்த நெருக்குதல்கள் காரணமாக, தனது வருகையை ரத்து செய்வதாக அறிவித்தார்.
“சூப்பர் ஸ்டாருக்கு சங்கடமான சூழலையும், இக்கட்டான நிலைமையையும் தாங்கள் ஏற்படுத்த விரும்பவில்லை” என்றும் ஞானம் அறக்கட்டளையின் பத்திரிக்கை செய்தி தெரிவித்தது.
“புனையப்பட்ட, அடிப்படையற்ற வதந்திகளைப் பரப்பி, அதன் மூலம் சில தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்கு அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் போக்கைக் கண்டிக்கிறோம். இவர்கள் எங்களின் வணிகப் போட்டியாளர்களின் நோக்கங்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இத்தகைய வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்றும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் பத்திரிக்கை அறிக்கை சாடியிருக்கிறது.
“போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் வாடிக் கொண்டிருக்கும் மக்களுக்காக இந்த அரசியல்வாதிகள் எதையும் செய்ததில்லை. இத்தகையவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்பதும், அவர்களுக்கான முறையான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும், தங்களின் வாழ்க்கையை அவர்கள் கௌரவத்தோடு தொடர வேண்டும் என்பதும்தான் எங்களின் நோக்கமே தவிர, அரசியல் நோக்கம் எதுவும் எங்களுக்குக் கிடையாது” என்றும் ஞானம் அறக்கட்டளை விளக்கியிருக்கிறது.
-செல்லியல் தொகுப்பு