சென்னை : துணிவு படத்திற்குப் பிறகு அஜித்தின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘விடாமுயற்சி’ நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் அர்ஜூனும் வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல்.
அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் முன்னோட்டம் இதுவரையில் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. படத்திற்கான வெளியீட்டுத் தேதியும் பிப்ரவரி 6 என படத்தின் தயாரிப்பாளர்கள் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. இந்தப் படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அஜித் தற்போது தீவிரமாக கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார்.