கோலாலம்பூர் – (கூடுதல் தகவல்களுடன்) கிம் ஜோங் நம் கொலை விவகாரத்தில், மலேசியா, வடகொரியா இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, வடகொரியாவில் இருந்த மலேசியத் தூதரகத்தைச் சேர்ந்த 9 மலேசியர்களை அந்நாட்டு அரசு நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தடுத்து வைத்திருந்தது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அவர்கள் அனைவரும் தனிவிமானம் மூலம் பத்திரமாக மலேசியா திரும்பினர்.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கிம் ஜோங் நம் உடல், நேற்று வியாழக்கிழமை, பெய்ஜிங் அனுப்பி வைக்கப்பட்டதாக முக்கிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ராவில் வட கொரியாவில் இருந்து நாடு திரும்பிய மலேசியர்களுடன் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான்…
இந்நிலையில், 9 மலேசியர்களும் நாடு திரும்பியிருப்பது அத்தகவலை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.
கடந்த புதன்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்க அந்நாட்டுடன் மலேசியா, “மிகவும் தீவிரமான” முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, கிம் ஜோங் நம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் இரு பெண்களால் கொடிய இரசாயனமான விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட்டை முகத்தில் தேய்த்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இக்கொலை தொடர்பாக வடகொரியா, மலேசியா இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வடகொரியாவில் இருந்த மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து உரையாடிய நஜிப்
இதற்கிடையில் தற்போது சென்னையில் இருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக், இன்று வெள்ளிக்கிழமை அங்கிருந்து தொலைபேசி மூலம், வட கொரியாவிலிருந்து நாடு திரும்பிய மலேசியத் தூதரக அதிகாரி முகமட் அஸ்ரினுடன் உரையாடி நலம் விசாரித்தார்.
வட கொரியாவிலிருந்து நாடு திரும்பிய மலேசியத் தூதரக அதிகாரி முகமட் அஸ்ரினுடன் தனது செல்பேசியின் மூலம் சென்னையிலிருந்து உரையாடும் நஜிப்…(படம்: நன்றி-நஜிப் துன் ரசாக் டுவிட்டர் படம்)