புத்ரா ஜெயா – மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் (Court of Appeal) தலைவரான டான்ஸ்ரீ முகமட் ரவுஸ் ஷரிப் நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமனம் பெற்றிருக்கிறார்.
வயது காரணமாக பதவி ஓய்வு பெறும் துன் அரிபின் ஜக்காரியாவுக்குப் பதிலாக புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் முகமட் ரவுஸ் நியமனத்திற்கு மாமன்னரும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுபவர் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அரச ஆட்சியாளர்கள் மன்றத்தின் அனுமதியோடு அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில் மலாயாவுக்கான தலைமை நீதிபதியாக இருக்கும் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் மகினுடின், முகமட் ரவுசுக்குப் பதிலாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதே வேளையில் கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியான டான்ஸ்ரீ அகமட் மாரோப் மலாயாவுக்கான புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேற்குறிப்பிட்ட நியமனங்கள் அனைத்தும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகின்றன.
இந்த பதவி நியமனங்களுக்கான அங்கீகாரக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை மாமன்னர் மாளிகையில் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.