கோலாலம்பூர் – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்றிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அது ஒரு புறம், இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் வேளையில், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரகம், திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்தியா செல்வதற்கான விசா பெற மலேசியர்கள் 190 ரிங்கிட் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, முதல் அது 457 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 150 விழுக்காடு கட்டண உயர்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், வர்த்தக ரீதியில் அடிக்கடி இந்தியா சென்று வரும் மலேசியர்களுக்கு, 457 ரிங்கிட் செலுத்தி ஓராண்டுக்கு விசா எடுத்துக் கொள்வது சாதகமாக அமைய, எப்போதாவது ஒரு முறை இந்தியாவிற்குச் சுற்றுலா செல்பவர்களுக்கு 457 ரிங்கிட் கட்டணம் என்பது பெரும் சுமையாகவே தெரிகின்றது.
இதனால், மலேசிய இந்தியர்கள் மத்தியில் இந்தப் புதிய விசா கட்டணம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கோலாலம்பூர், பினாங்கு போன்ற மாநிலங்களில் சுற்றுலா நிறுவனங்களை நடத்தி வரும் மலேசிய இந்தியர்கள் பலர் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மலேசியா அறிவித்திருக்கும் இலவச விசா
இதனிடையே, மலேசிய அரசு, இந்திய அரசுக்கு நேர்மாறாக, ஏப்ரல் 1 முதல் புதிய விசா முறையை அமல்படுத்தியிருக்கிறது.
மலேசியாவிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில், குறைந்த விசாவை அறிவித்திருக்கிறது மலேசியா.
இதுவரை மலேசியாவிற்கு வரும் இந்தியப் பிரஜைகள் விசா கட்டணமாக 370 ரிங்கிட் (இந்திய மதிப்பில் 5,417 ரூபாய்) செலுத்தி வந்தனர். இனி 15 நாட்கள் மலேசியாவில் தங்கிச் செல்ல செயலாக்கக் கட்டணமாக 88.50 ரிங்கிட் (இந்திய மதிப்பில் 1,288 ரூபாய்) செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.