சென்னை – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் கூடிய அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் கீழ்க்காணும் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கின்றனர். இந்த முடிவுகளை அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்புக் கூட்டம் நடந்து முடிந்த பின்னர் இந்திய நேரம் (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணியளவில், பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்தார்:
- ஒரே குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்கிக் கொண்டுவிடக் கூடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கின்றது.
- இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்தும், அதிமுக ஆட்சியிலிருந்தும் அகற்றிவிட்டு, அதிமுக ஆட்சியைத் தொடர்வதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.
- இந்த முடிவுகள் ஓ.பன்னீர் செல்வம் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது.
- இதற்கிடையில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- தேனியில் இருந்த பன்னீர் செல்வம், சென்னைக்குப் புறப்பட்டிருக்கின்றார்.
- தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் தீவிரமாக தொடரப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.