கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடம் மலேசியாவில் வழங்கப்பட்டிருப்பது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவுக்கு ஹிண்ட்ராப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதைத் தொடர்ந்து, அந்நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பெர்காசாவும் கடிதம் ஒன்றை ஐநாவுக்கு அனுப்பியிருக்கிறது.
பயங்கரவாதக் காரணங்களால் ஜாகிர் நாயக்கின் நிரந்தர வசிப்பிட அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டுமென மலேசியாவுக்கு அறிவுறுத்துமாறு, ஹிண்ட்ராப் ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியிருப்பதன் மூலம் மலேசியாவின் தோற்றத்தை உலக அரங்கில் அந்த இயக்கம் சிதைத்துள்ளது என்றும் பெர்காசாவின் தலைவர் டத்தோ இப்ராகிம் அலி குற்றம் சாட்டினார்.
அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தபோது, அதில் பல அடிப்படையற்ற விஷயங்கள் இருந்தன என இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய இப்ராகிம் அலி அதன் காரணமாக, ஜாகிர் நாயக்கைத் தற்காக்கும் விதமாகவும், நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஹிண்ட்ராப்பின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.
ஹிண்ட்ராப்புடன் தகராறில் ஈடுபடத் தான் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியிருக்கும் இப்ராகிம், ஹிண்ட்ராப் கடிதம் எழுதியதால் உண்மையை எடுத்துக் கூற நானும் கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார்.