கோலாலம்பூர் – பேஸ்புக்கில் கடந்த சில நாட்களாக இளைஞர்களிடம் அதி வேகமாகப் பரவி வரும் ஒரு புதிய செயலி தான் ஃபேஸ்ஆப் (Faceapp).
அண்டிரோய்டில் இலவலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இருக்கும் இச்செயலியிடம் உங்கள் செல்ஃபி (தம்படம்) ஒன்றைக் கொடுத்தால் போதும், உங்கள் முகத்தை சிறுவனாக, இளைஞனாக, சினிமா நட்சத்திரம் போல் பளீச்சென ஒப்பனையுடன், பெண்ணாக, ஆணாக, வயதான தோற்றத்தில் என தனித்தனியாக மாற்றிக் கொடுப்பதில் பலே கில்லாடியாக இருக்கிறது.
பிளேஸ்டோரில் இது போன்ற நூற்றுக்கணக்கான செயலிகள் இருந்தாலும் கூட, அதில் பெரும்பாலானவை நமக்குத் திருப்தியளிக்கக் கூடிய வசதிகளைச் செய்வதில்லை.
ஆனால், இச்செயலி அதனை மிகவும் சிறப்பாகச் செய்வதால், இளைஞர்களின் செல்லப் பிள்ளையாகிவிட்டது.
இச்செயலியில் உங்கள் படத்தைப் பார்த்து நீங்களே உங்கள் அழகில் மயங்கிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இதனிடையே, குறும்புக்கார ரசிகர் ஒருவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் புகைப்படத்தை ஃபேஸ் ஆப் மூலமாக பெண்ணாக மாற்றி டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
ரஷியாவைச் சேர்ந்த வயர்லெஸ் லேப் என்ற நிறுவனம் இச்செயலியை உருவாக்கி கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.