கோலாலம்பூர் – சிரியாவில் இருக்கும் மலேசிய ஐஎஸ் தீவிரவாதக் குழுவிற்குத் தலைவனாக இருந்த முகமட் வாண்டி மொகமட் ஜெடி இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவதை காவல்துறை நம்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.
“அந்தச் செய்தி குறித்து எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. அவன் உண்மையில் கொல்லப்பட்டானா? என்பதை விசாரணை செய்து வருகின்றோம். தான் இறந்துவிட்டதாக அவன் நாடகமாட சில காரணங்கள் இருக்கின்றன. அது எங்களுக்குத் தெரியும்” என்று காலிட் தெரிவித்திருக்கிறார்.
மலாக்காவைச் சேர்ந்த முகமட் வாண்டி கடந்த 2014-ம் ஆண்டு, தனது மனைவியுடன் சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாதக் குழுவில் இணைந்தான்.
இந்நிலையில், கடந்த வாரம், அவன் மீது நடத்தப்பட்ட வான் வழித்தாக்குதலில் முகமட் வாண்டி இறந்துவிட்டதாக அவன் மனைவி பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.