கராச்சி – பயணப் பெட்டியிலும், காலணியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 துப்பாக்கிகள் 71 துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவற்றோடு மலேசியர் ஒருவர் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அவருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று சனிக்கிழமை அல் முகமட் அல்பி கைரில் (Al Muhd Alfie Kqhyriel) என்ற பெயர் கொண்ட அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் டிரிபியூன் என்ற இணைய ஊடகம் தெரிவித்திருக்கிறது. மலேசியா நோக்கி வரவிருந்த விமானம் ஒன்றில் மேற்குறிப்பிட்ட ஆயுதங்களுடன் அந்நபர் விமானம் ஏறவிருந்த நிலையில், அவரைப் பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டுபிடித்தனர்.

ஒருநாளுக்கு முன்னதாக அவர் கராச்சி வந்தடைந்திருக்கிறார். துப்பாக்கிகளுடன் பிடிபட்ட அவரைத் தடுத்து வைக்கப்பட்ட அவரை பாகிஸ்தானின் புலனாய்வு அதிகாரிகள் தனியே ஓர் இடத்திற்குக் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டவர்களையும் குறி வைத்து விசாரணைகள் நடத்தப்படுவதாக எக்ஸ்பிரஸ் டிரிபியுன் மேலும் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் மலேசியாவின் ஸ்டார் இணைய ஊடகம் வெளியிட்ட செய்தியில் 20 வயது கொண்ட அந்நபர் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற தகவலையும் வெளியிட்டிருக்கிறது.