கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் காவல்துறைத் தலைமையகம் உட்பட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளால் திட்டமிட்டிருந்த சதிச்செயல்களை மலேசியக் காவல்துறை முறியடித்தது.
புக்கிட் அம்மான் கூட்டரசு காவல்துறைத் தலைமையகம், ஜாலான் டிராவெர்ஸ் காவல் நிலையம், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் மற்ற வியூக இடங்களை ஐஎஸ் தீவிரவாதிகள் குறி வைத்திருந்ததாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அவர்களின் நோக்கம், குறிப்பிட்ட இடங்களில் குழப்பத்தை உருவாக்கி, ஆயுதங்களைக் கையகப்படுத்துவது தான் என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
எனினும், நம்பகமான உளவுத்துறையின் தகவல்கள் மூலம், இரு சந்தேக நபர்களை புக்கிட் அம்மான் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு கைது செய்தது.
பெட்டாலிங் ஜெயாவில் 25 வயதான ஆசிரியர் ஒருவரும், இந்தோனிசியாவைச் சேர்ந்த 23 வயதான நபரும் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.