Home நாடு ஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன்: சிஐடி தலைவர் குற்றமற்றவர் என நிரூபித்தார்!

ஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன்: சிஐடி தலைவர் குற்றமற்றவர் என நிரூபித்தார்!

962
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புக்கிட் அம்மானைச் சேர்ந்த உயர் அதிகாரிக்கு சொந்தமான 320,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (1 மில்லியன் ரிங்கிட்), சந்தேகத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் முடக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்பணத்தில் எந்த ஒரு தில்லுமுல்லுவும் இல்லையென்பது விசாரணையில் நிரூபணம் ஆகியிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் முகமட் ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து முகமட் ஃபுசி ஹாருன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

“புக்கிட் அம்மான் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் வான் அகமட் நஜ்முடின் முகமது, ஷா ஆலமிலுள்ள தனது வீட்டை விற்றதன் மூலம் பெற்ற 700,000 ரிங்கிட்டை (260,770 ஆஸ்திரேலிய டாலர்கள்) ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வங்கிக் கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்.”

“அப்பணத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள தனது நெருங்கிய நண்பரின் மூலம் அங்குள்ள வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்திருக்கிறார்.”

“இது வரை விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களோடு, அப்பணம் கிடைத்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்திருக்கிறார்.”

“அதேவேளையில், தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் ஆஸ்திரேலியாவில் உள்ள வங்கிக் கணக்கில் அப்பணத்தை முதலீடு செய்து வைத்திருந்த காரணத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.”

 

 

 

“எனவே வான் அகமட் எந்த ஒரு குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதோடு, அவரது பணத்தின் மீது எழுந்த சந்தேகம் அடிப்படை ஆதாரமற்றது என்பதும் நிரூபணம் ஆகியிருக்கிறது.”என்று ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, கடந்த 2016-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள வான் அகமதுவின் காமன்வெல்த் வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், நிதி பரிமாற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும், இதனால் ஆஸ்திரேலிய அதிகாரிகள் அவரது வங்கிக் கணக்கில் இருந்த 320,000 ஆஸ்திரேலிய டாலர்களை முடக்கினர் என்றும் தெரிவித்திருக்கிறது.