மவுண்ட் பிளசண்ட் – அமெரிக்காவில் மத்திய மிச்சிகனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் வளாகத்தில், வெள்ளிக்கிழமை அமெரிக்க நேரப்படி, காலை 8.30 மணியளவில் தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய 19 வயது இளைஞனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுமுறையை முன்னிட்டு, தங்களது மகனை அழைத்துச் செல்ல தங்கும்விடுதிக்கு வந்த திவா டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் டேவிசை, அவர்களது மகன் ஜேம்ஸ் எரிக் டேவிஸ் ஜூனியர், துப்பாக்கியால் சுட்டதாக மிச்சிகன் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இதனிடையே, அப்பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஜேம்ஸ் எரிக் டேவிஸ் ஜூனியர் பதுங்கியிருக்கலாம் என்பதால், சுமார் 100 காவல்துறையினர் அப்பல்கலைக்கழகத்தைச் சுற்று வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.