கோலாலம்பூர்: அண்மையில், மலேசியாவில் கடத்தப்படுவதற்கான ஆபத்துகள் இருப்பதாக அமெரிக்கர்களை, அமெரிக்கா எச்சரித்ததுக் குறித்து மலேசியக் காவல் துறைத் தலைவர், முகமட் புசி ஹாருண் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அவர் கூறினார். பயண அறிவுரை அறிக்கையில், மலேசியாவை ‘கே’ பிரிவில் இணைத்திருப்பதை அமெரிக்கா விலக்க வேண்டும் எனவும், நாட்டின் உண்மை நிலையினை அமெரிக்கா தெரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
“பாதுகாப்பு ரீதியில் மலேசியா, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்நோக்கும் வகையில், எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது” என அவர் குறிப்பிட்டார். கிழக்கு சபாவில் கடத்தல், பிணை பிடித்தல் போன்ற சாத்தியங்கள் இருப்பதால், அந்த மாநிலத்தை அமெரிக்கா ‘கே’ பிரிவில் இணைத்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்த புசி, கிழக்கு சபாவின் பாதுகாப்பை உறுதிபடுத்த மலேசியா நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கடத்தல் சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது, அம்மாநிலத்தில் இம்மாதிரியான நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை புசி தெளிவுப்படுத்தினார்.