கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மாலையில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கில் நடைபெற்ற மஇகா மகளிர் பகுதியின் தொகுதி மகளிர் தலைவிகளுக்கான பொதுத்தேர்தலுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்காக மஇகா தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவித்தார்.
மஇகா மகளிர் பகுதியின் வாக்காளர்களை அணுகும் நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டிய மஇகா தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரா, அம்னோவுக்கு எப்படி அதன் மகளிர் பகுதி தூணாகத் திகழ்கின்றதோ அதேபோன்று, மஇகாவிலும் திகழ வேண்டும் என்ற வேட்கையை வெளிப்படுத்தியதோடு, அதற்காக டத்தோ மோகனா முனியாண்டி தலைமையில் மஇகா மகளிர் பகுதி சிறப்பான பொதுத் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் பாராட்டினார்.
மோகனா முனியாண்டி உரை
“இந்தத் தொகுதிகளில் சுமார் 1 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இந்திய வாக்காளர்களின் வாக்குகள் திசை மாறினால், அந்தத் தொகுதியின் வெற்றி தோல்வி மாறுபடும் என்பது எங்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்றும் கூறினார்.
தொடர்ந்து இந்திய வாக்காளர்களை நேரடியாக அணுக மஇகா மகளிர் பகுதி எடுத்து வரும் நடவடிக்கைகளையும் மோகனா விளக்கினார்.
“அக்டோபரில் பொதுத்தேர்தல்” – சுப்ரா
இன்றைய மஇகா மகளிர் பகுதியின் பட்டறையில் கலந்து கொண்டவர்களுடன் டாக்டர் சுப்ரா – அவருடன் மோகனா முனியாண்டி, மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன், மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ முருகையா, மது மாரிமுத்து ஆகியோர்….
எதிர்வரும் அக்டோபர் மாதம் 14-வது பொதுத்தேர்தல் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளில் மஇகா தீவிரமாக ஈடுபட்டுத் தயார் நிலையில் இருப்பதாகவும், மஇகா மகளிர் தலைவிகளிடையே உரையாற்றிய சுப்ரா அறிவித்தார்.
“தற்போது இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 10 இலட்சமாக இருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் 9 இலட்சமாக இருந்தார்கள். தற்போது மேலும் 1 இலட்சம் இந்திய வாக்காளர்கள் கூடியுள்ளனர். இருப்பினும் ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள்ளாக மேலும் கணிசமான அளவில் இந்திய வாக்காளர்களைச் சேர்த்து விடும் நோக்கத்தில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். எதிர்வரும் அக்டோபரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதால் அதற்காக மஇகா தயார் நிலையில் இருக்கின்றது” என்றும் சுப்ரா அறிவித்தார்.
இதற்கிடையில் மஇகாவின் 6 இலட்சம் உறுப்பினர்களில் ஏறத்தாழ 440,000 உறுப்பினர்கள் வாக்காளர்களாக இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்களையும் அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சுப்ரா மேலும் தெரிவித்தார்.