Home Featured உலகம் “உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றுவோம்” – டாக்டர் சுப்ரா

“உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றுவோம்” – டாக்டர் சுப்ரா

790
0
SHARE
Ad

subra-wha2017-meetings-24052017 (3)ஜெனிவா – இங்கு நடைபெற்று வரும் 70-வது உலக சுகாதார மாநாட்டில் மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நேற்று வியாழக்கிழமை (25 மே 2017) உலக சுகாதார நிறுவனத்தின் புதிய தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரிஷியசை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின்போது சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமும், ஐக்கிய நாட்டு மன்றத்திற்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி அம்ரான் முகமட் சின்னும் உடனிருந்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்தக் கலந்துரையாடலின்போது உலக சுகாதார நிறுவனத்திற்கும், மலேசியாவுக்கும் இடையிலான பரஸ்பட நடவடிக்கைகள், நல்லுறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

WHO DG-TEDROSஉலக சுகாதார நிறுவனத்தின் புதிய தலைவர் டாக்டர் டெட்ரோஸ் (நடுவில்) – முன்னாள் தலைவர் சீனாவின் மார்கரெட்டுடன் (வலது புறம்)

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநராகக்  கடந்த செவ்வாய்க்கிழமை மே 23-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எத்தியோப்பியா நாட்டின் பிரதிநிதி டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரிஷியஸ் இந்தப் பதவியை வகிக்கும் முதல் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவார்.

கடந்த பத்தாண்டுகளாக இந்தப் பதவியை வகித்து வந்த சீனாவின் டாக்டர் மார்கரெட் சான்னிடமிருந்து புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் 52 வயதான டெட்ரோஸ் மலேரியா நோய் துறையில் ஒரு நிபுணராவார்.

subra-tedros-25052017-2

அவருக்கு மலேசியாவின் சார்பில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட டாக்டர் சுப்ரா, உலக சுகாதார நிறுவனத்தின் புதிய தலைவர் என்ற முறையில் அவருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் புதிய தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டாக்டர் டெட்ரோஸ் சந்தித்த முதல் வெகு சில பிரமுகர்களில் டாக்டர் சுப்ராவும் ஒருவராவார்.

subra-tedros-25052017-3டாக்டர் டெட்ரோசுடனான சந்திப்பின்போது டாக்டர் சுப்ராவுடன் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் (வலது), ஐக்கிய நாடுகளுக்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி அம்ரான் முகமட் சின் (இடது)…

டாக்டர் டெட்ரோசுடனான தனது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் டாக்டர் சுப்ரா “உலக அளவில் சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு சுமையில்லாத, சுலபமாகக் கிடைக்கக் கூடிய, சரிநிகரான சுகாதார சேவைகள் குறித்தும் நாங்கள் விரிவாகப் பேசினோம். தனது பதவிக் காலத்தில் தான் முன்னுரிமை கொடுக்கப்போவது உலக அளவில் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் மலேசியாவுடன் இணைந்து பணியாற்றுவதுதான் என டாக்டர் டெட்ரோஸ் தெரிவித்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்த குறுகிய காலத்திற்குள்ளாகவே, மலேசியா இந்தத் துறையில் புரிந்திருக்கும் சாதனைதான் இதற்குக் காரணம். நமது சாதனைகளின் மூலம் பல பாடங்களை மற்றவர்கள் படித்துக் கொள்ள முடியும். மலேசியாவின் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் உலக அளவில் இந்தத் துறையில் மலேசியா தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வரும்” என்று கூறியிருக்கிறார்.

subra-tedros-25052017-1நினைவுப் பரிசுகளை டாக்டர் டெட்ரோசுடன் டாக்டர் சுப்ரா பரிமாறிக் கொள்கிறார்…அருகில் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம்…

குறிப்பாக ஹெப்படிடிஸ் ‘சி’ சிகிச்சை வழங்குவதில் ஏற்படக் கூடிய செலவினங்களைப் பெருமளவில் குறைப்பதில் மலேசியா வெற்றியடைந்திருப்பது டாக்டர் டெட்ரோசை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது என்று தெரிவித்திருக்கும் டாக்டர் சுப்ரா, மலேசியா போன்ற வளரும் நாடுகள் தங்களின் சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ள மேலும் கூடுதலான வாய்ப்புகளை வழங்க டாக்டர் டெட்ரோஸ் முன்வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

குறுகிய காலத்திற்கு உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி பெறுவதன் மூலம் நமது இளம் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்களின் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதோடு அவர்களுக்கு அனைத்துலக அனுபவமும், வெளிச்சமும் கிடைக்கும் என்றும் டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்திருக்கிறார்.

இனிவரும் காலங்களில் டாக்டர் டெட்ரோசுடன் அணுக்கமாக இணைந்து பணிபுரிவதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருக்கும் டாக்டர் சுப்ரா, சுகாதார அமைச்சுக்கும், உலக சுகாதார நிறுவனத்திற்கும் இடையிலான மேலும் வலுவான தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் டெட்ரோசுடனான சந்திப்பு ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

படங்கள்: நன்றி – drsubra.com