கோலாலம்பூர் – புரோட்டான் கார் நிறுவனத்தின் 49.9 சதவீதப் பங்குகள் சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டது குறித்து தனது சோகத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, “எனது குழந்தையை நான் இப்போது இழந்துள்ளேன். கூடிய விரைவில் எனது நாட்டையும் இழப்பேன்” என உருக்கத்துடன் தனது வலைப் பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
“புரோட்டோன் எனது மூளையில் உதித்த குழந்தை என்று அவர்கள் கூறுகின்றார்கள். இப்போது எனது மூளையின் குழந்தை விற்கப்பட்டுவிட்டது. நான் சோகத்தில்தான் இருக்கிறேன். வேண்டுமானால் அழலாம். ஆனால் விற்பனை நடந்து முடிந்து விட்டது. இனி புரோட்டோன் வர்த்தக ரீதியாக வெற்றியடையலாம். உலகம் எங்கும் புரோட்டோன் கார்கள் விற்பனையாகலாம். நிறைய பணம் இருப்பதாலும், உயரிய தொழில்நுட்பத்தினாலும் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடலாம். ஆனால் இத்தகைய வெற்றிக்காக நான் பெருமையடைய முடியாது. எனது நாட்டுக்கு சொந்தமில்லாத ஒரு வெற்றி குறித்து நான் பெருமைப்பட முடியாது. வேறு சில மலேசியர்கள் வேண்டுமானால் பெருமைப்படலாம்” என வருத்தம் தொனிக்க மகாதீர் எழுதியிருக்கிறார்.
“நாடு விசாலமான நெடுஞ்சாலைகளையும், உயர்ந்த கட்டடங்களையும், பளிச்சிடும் புதிய நகர்களையும், அழகாகக் கட்டமைக்கப்பட்ட இடங்களையும் கொண்டிருக்கலாம். ஆனால் நான் பெருமையடைய முடியாது. நம்மை வாங்கியவர்கள் மேம்படுத்திய நாட்டில் வாழ்வதை நான் பெருமையாகக் கொள்ள முடியாது” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
“கூடிய விரைவில் இறந்து விடுவேன்”
“நான் கூடிய விரைவில் இறந்து விடுவேன். சராசரி முதுமை வயதைக் கூட நான் கடந்து விட்டேன். எனது இறுதி ஆண்டுகளில், இறுதி மாதங்களில் அல்லது இறுதி நாட்களில் நான் இருந்து வரும் சூழ்நிலையில், நமது அன்புக்குரிய நாடு கோடிக்கணக்கான நமது கடன்களை அடைக்க வெளிநாட்டினருக்கு விற்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நமது நாட்டை மேலும் மேலும் நாம் விற்க வேண்டிய நிலைமையில் நாம் இருக்கிறோம்” என்றும் உருக்கத்துடன் கூறியிருக்கும் மகாதீர்,
“நமது சொத்து என்பது நமது நிலம்தான்! கடந்த காலங்களில் நமது நிலங்களை நிறைய அளவில் நாம் விற்றோம். புரோட்டோனை விற்றது போல் நமது நிலங்களையும் நாம் நிறைய அளவில் விற்க வேண்டியிருக்கும். புரோட்டோன் விற்பனை என்பது இதுபோன்று நாம் நிறைய அளவில் மேற்கொள்ளப்போகும் விற்பனைகளின் தொடக்கம்தான். நமது கோடிக்கணக்கான கடன்களை அடைக்க நமக்கு வேறு வழியில்லை. நமது சொத்துக்களை விற்றுத்தான் ஆக வேண்டும். காலப்போக்கில் நமது நாட்டையும் நாம் இழந்து விடுவோம். நாடு பெருமை மிக்க அளவில் இருக்கும் ஆனால் மற்றவர்கள் அதற்கு உரிமையாளர்களாக இருப்பார்கள். நான் கொஞ்சம் பலவீனமான கோழைதான். மற்ற மலேசியர்கள் காய்ந்துபோன கண்களோடு இருக்கும்போது நான் மட்டும் அழுது கொண்டிருப்பேன். எனது குழந்தையை நான் இழந்து விட்டேன். வெகுவிரைவில் எனது நாட்டையும் இழப்பேன்” என உருக்கத்துடன் தனது பதிவை நிறைவு செய்திருக்கிறார் மகாதீர்.