சென்னை – ‘காலா’ படப் பிடிப்புக்காக மும்பையில் தற்போது இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது அடுத்த கட்ட அரசியல் காய் நகர்த்தல்கள் குறித்தும் தீவிரமாக பலருடன் ஆலோசித்தும், கருத்துப் பரிமாற்றம் செய்தும் வருகிறார்.
மும்பை புறப்படுவதற்கு முன்னர், அவர் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனைச் சந்தித்துப் பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் தூய்மையான, மக்கள் நலன் காக்கும், ஊழலற்ற அரசு அமைய வேண்டும் எனப் பாடுபட்டு வருபவர்களில் முதன்மையானவர் தமிழருவி மணியன்.
சிறந்த மேடைப் பேச்சாளர். ஒழுக்க வாதி. மலேசியாவுக்கும் பல முறை வருகை தந்து தனது ஆரவாரமற்ற, அமைதியான, ஆனால் ஆழமான, கருத்துக்கள் தெறிக்கும் மேடைப் பேச்சுகளால் பலரைக் கவர்ந்தவர்.
இருப்பினும் தமிழக அரசியலில் தன்னைப் போன்றவர்களுக்கு இடமில்லை என்று கூறிவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தவர் மணியன்.
ஆனால், மக்கள் எழுச்சியாக வெடித்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் அவரை மீண்டும் சமுதாயப் போராட்டத்திலும், அரசியல் பாதையிலும் கொண்டு வந்து இணைத்தது.
அண்மையில் இவர் ரஜினியோடு சுமார் ஒன்றரை மணி நேரம் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மணியன், ஊழலற்ற ஆட்சி கொண்டு வரவேண்டும் என விரும்பும் ரஜினியின்அரசியலுக்கு காந்திய மக்கள் இயக்கம் துணை நிற்கும் எனக் கூறியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் போன்றவர்கள் தமிழரல்லாத ரஜினி தமிழ் நாட்டு அரசியலுக்கு வரக் கூடாது எனக் கூக்குரலிட்டு வரும் வேளையில், சிறந்த தமிழ்ப் பற்றாளரும், தூய்மையான அரசியலை நடத்த விரும்புபவருமான தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினியை ஆதரிப்பது, ரஜினிக்கு பெரும் பலம் சேர்க்கும் எனலாம்.
தமிழருவி மணியன் போன்றவர்கள் தனியாகப் போராடினால் அவர்களுக்குக் கிடைக்கும் கவனிப்பும், செல்வாக்கும் மிகவும் குறைவு. ஆனால் அவர்களே ரஜினி போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களுடன் இணையும் போது, ரஜினிக்கும் மரியாதை கூடுகிறது, மணியனின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் செல்வாக்கு கூடுகிறது என்பது பார்வையாளர்களின் கணிப்பாகும்.
– இரா.முத்தரசன்