Home உலகம் ஈழத் தமிழருக்காக கைகோத்த 25 நாடுகள்! ஜெனிவாவில் திக்.. திக்.. நிமிடங்கள்!

ஈழத் தமிழருக்காக கைகோத்த 25 நாடுகள்! ஜெனிவாவில் திக்.. திக்.. நிமிடங்கள்!

593
0
SHARE
Ad

Subramaniya-Swamy-Sliderஇலங்கை, மார்ச்.23- மாற்றங்கள், ஏமாற்றங்களை எல்லாம் கடந்து, 25 நாடுகளின் ஆதரவோடும் 13 நாடுகளின் எதிர்ப்போடும் இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறி விட்டது.

இதுவரை ஈழத்தமிழன் அழிவுக்கு எதிரான குரல், இலங்கையிலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமே கேட்டது. அந்தக் குரலுக்கு உலகளாவிய அங்கீகாரம் இப்போது கிடைத்துள்ளது.

2012-ம் ஆண்டு மார்ச் மாதத் தீர்மானத்துக்கும் இப்போதைய தீர்மானத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லைதான். அதேபோல் மக்களின் முன்னேற்றத்துக்காகக் கொடுக்கப்பட்ட ஓர் ஆண்டு அவகாசத்தில் இலங்கையின் கள நிலைமையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது மேலும் ஓர் ஆண்டு காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அனைத்து தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாள் மார்ச் 21. அன்றைய தினம் இந்திய நேரம் மதியம் 2 மணிக்கு இறுதி விவாதம் நடந்தது. இலங்கையை வெளிப்படையாக  ஆதரித்தது பாகிஸ்தான். ”இலங்கைக்கு இன்னும் அவகாசம் தேவை. அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது முறையானதல்ல” என்றும் அந்த நாடு தெரிவித்தது.

இலங்கையை தன் வசத்துக்குள் கொண்டுவர துடித்துக் கொண்டிருந்த அமெரிக்கா, இத்தனை நாட்களாக ‘ஐ.நா. தீர்மானத்தில் சர்வதேச விசாரணை’ என்று பொய்யாக மிரட்டுகிறது. இப்போது அதை விலக்கிக்கொண்டு ஒரு வெற்றுத் தீர்மானத்தைத்தான் ஐ.நா-வில் சமர்ப்பித்தது. இலங்கையில் தமிழர் வாழ் நிலங்களில் இராணுவத்தை உடனே விலக்க வேண்டும், போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும், மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்… இவ்வாறு அந்த தீர்மானம் கூறி இருக்கிறது.

இலங்கை மீதான நடவடிக்கைகள் பேசப்பட்ட காலத்திலிருந்தே இனப்படுகொலை என்பதை மறைத்துப் போர்க் குற்றம் என்ற அடிப்படையிலேயே அமெரிக்கா தனது தீர்மானங்களை முன்வைத்தது. இனப்படுகொலை என்று குறிப்பிடப்படவில்லையே என்று கேள்விகள் எழுந்தபோது ‘போர்க் குற்றத்தின் மீதான சுதந்திர விசாரணை’ நடக்குமானால் அதிலே ‘இனப்படுகொலை’ என்பது சேர்க்கப்படும் என்று ஏமாற்றி, இப்போது அந்த ‘சுதந்திர விசாரணை’ என்ற பேச்சையே விலக்கிக் கொண்டது.

இப்படி இந்தத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டதற்கு, இலங்கையை காப்பாற்றும் முடிவில் இந்தியா உறுதியாக இருப்பதே காரணம் என்று சொல்லப்பட்டாலும், இதற்குப் பின்னால் சுப்பிரமணிய சுவாமியின் (படம்)  பங்களிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.

மார்ச் 1-ம் தேதி, மகிந்த ராஜபக்சவை சந்தித்த சுவாமி, அடுத்த நான்காவது நாளிலேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திக்கிறார் என்றால் அது இலங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் செயல்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த விசாரணையாக இருந்தாலும், அது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசால்தான் நடத்தப்பட வேண்டும். ஒருபோதும் சர்வதேச பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்பதே சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்க அதிகாரிகளிடமும் ஒபாமாவிடமும் தெரிவித்த கருத்தின் சுருக்கம்.

இதையேதான் அமெரிக்காவும் தன் தீர்மானத்தில் கூறி இருக்கிறது. எப்படி இருந்தாலும் தமிழர் பிரச்சினையை உலக நாடுகளின் விவாதப் பொருளாக மாற்றிவிட்டது இந்தத் தீர்மானம்!