புத்ராஜெயா – நேற்று வியாழக்கிழமையுடன் (22 ஜூன் 2017) புத்ரா ஜெயாவிலுள்ள தேசியப் பதிவிலாகாவில் நிறைவடைந்த மெகா மைடப்தார் எனப்படும் மலேசிய இந்தியர்களுக்கான ஆவணப் பதிவு இயக்கத்தின் மூலம் இதுவரை சுமார் 2,500 பேர் மட்டுமே முன்வந்து தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர் என்பதை அறிவித்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் “இதன் மூலம் நாட்டில் 3 இலட்சம் இந்தியர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என எதிர்க்கட்சியினரும், ஒருசில தரப்புகளும் கூறி வந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பது நிரூபணமாகியுள்ளது” என்றும் கூறினார்.
இந்தியர் புளுபிரிண்ட் எனப்படும் இந்தியர் வியூகச் செயல்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த ஆவணப் பதிவு இயக்கம் நேற்று கூட்டரசுப் பிரதேச மக்களுக்காக புத்ரா ஜெயாவிலுள்ள தேசிய பதிவிலாகாவில் நடத்தப்பட்டபோது, அதில் கலந்து கொண்டு டாக்டர் சுப்ரா ஆவணப் பதிவு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் நடத்திய சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாட்டின் பல பகுதிகளில் நேரடியாக சென்று நடத்தப்பட்ட ஆவணப் பதிவு இயக்கத்தின்போது, உண்மையிலேயே ஆவணப் பிரச்சனைகள் இருந்திருந்தால், நாடற்ற குடிமக்களாக யாராவது இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் முன்வந்து பதிந்திருப்பார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் கூட இத்தகைய பிரச்சனைகள் கொண்ட யாரையும் அழைத்து வந்ததாகவோ, ஆவணப் பதிவு இயக்கத்திற்கு அனுப்பி வைத்ததாகவோ தெரியவில்லை” என்றும் டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டினார்.
எனினும், ஆவணப் பதிவுப் பிரச்சனைகள் கொண்ட இந்தியர்கள் தங்களை அணுகினால் தொடர்ந்து அவர்களுக்கான உதவிகள், ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் டாக்டர் சுப்ரா கூறினார்.