கோலாலம்பூர் – சிரியாவில் இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, கிழக்கு ஆசியா மாநிலமாக, மலேசியா, சிங்கப்பூரை குறி வைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனையடுத்து, வெளிநாட்டு தீவிரவாதிகள் மூலமாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஐஎஸ் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
கடந்த வாரம் ‘எஸ். ராஜரட்னம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்’ வெளியிட்ட கட்டுரை ஒன்றில் மூத்த ஆய்வாளரான ஜஸ்ஸந்தர் சிங் கூறியிருக்கும் தகவலில், “நட்பு ஊடகங்களின் மூலமாக நாடுகளைத் தனித்தனியே ஐஎஸ் அமைப்பினர் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அவற்றில் இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ், தெற்கு தாய்லாந்து, மியன்மார் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.
“வெளிநாட்டு தீவிரவாதிகள் இந்த நாடுகளுக்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு எப்படித் தாக்குதல் நடத்துவது போன்ற ஆலோசனைகளும், எதைக் குறி வைக்க வேண்டும் என்ற கட்டளைகளும் வழங்கப்படும்” என்றும் ஜஸ்சந்தர் சிங் சிங்கப்பூரின் ‘தி ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.