சென்னை – எதிர்வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக் குழு கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுத் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்படுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஒரு மனதாக சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால், கட்சியிலிருந்து சசிகலாவுக்கு எதிராக குறிப்பிடத்தக்க எதிர்ப்புகள் எதுவும் வர வாய்ப்பில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சசிகலா தேர்வு செய்யப்படுவதைத் தடுக்க நீதிமன்றம் மறுப்பு
இதற்கிடையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்து, சசிகால அதிமுக பொதுச் செயலாளராக வருவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
ஆனால், நேற்று புதன்கிழமை இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.