கோலாலம்பூர் – வரும் 2020-ம் ஆண்டிற்குள் கோலாலம்பூரில் சாலையோர விற்பனையாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது சாலையோர உணவுக்கடைகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதற்குள் வேறு இடங்களுக்கு மாற வேண்டும் அல்லது உணவு வாகனங்களுக்குத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தெங்கு அட்னான் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், சாலையோரத்தில் சமையல் செய்யக்கூடாது என்பதால், பாதுகாப்பான இடங்களில் சமைத்து, அந்த உணவுகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் வைத்து மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்றும் அட்னான் தெரிவித்திருக்கிறார்.
சாலையோரங்களில் தற்போது நாசி லெமாக் கடைகளும், வாழைப்பழப் பொறியல், வடை போன்றவை விற்பனை செய்யும் கடைகளும் பெருகி வருவதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுவதோடு, உணவுகளில் தூசிகள் படுவதால், அதனைச் சாப்பிடுபவர்களின் உடல்நலமும் கெட்டு வருவது குறிப்பிடத்தக்கது.