கோலாலம்பூர் – வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியர்கள், தங்களது கடப்பிதழ் ஏதேனும் முடக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அதற்கெனத் தனிக் கருவி ஒன்றை குடிநுழைவு இலாகா அறிமுகப்படுத்தவிருக்கிறது.
அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் இந்தக் கருவி விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்றும், பயணிகள் தங்களது பயண நிலையை அதன் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் என்றும் குடிநுழைவு இலாகாவின் பொது இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபர் அலி தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் குடிநுழைவு பகுதி வரை சென்று அங்கு அதிகாரிகள் சொன்ன பிறகே தெரிந்து கொண்டு பயணிகள் சிரமப்பட வேண்டியதில்லை, முன்பே தெரிந்து கொண்டு அதற்கேற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் முஸ்தாபர் அலி குறிப்பிட்டிருக்கிறார்.
எல்எச்டிஎன் (Inland Revenue Board) அல்லது பிடிபிடிஎன் (National Higher Education Fund Corporation) ஆகியவற்றால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு மலேசியர்கள் பலருக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், தங்களது பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன்பே http://sspi2.imi.gov.my என்ற குடிநுழைவு இலாகாவின் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் முஸ்தாபர் அலி தெரிவித்திருக்கிறார்.