இலங்கை, மார்ச் 25-விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகளின் பிரேதங்கள் மீட்கப்பட்ட தேதியை குறித்த தகவல்களை இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்திருக்கிறார்.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி மற்றும் மகள் துவாரகா ஆகியோரது உடல்கள் 2009 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி மீட்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
போர் முடிவடைந்த நிலையில் மே 19 ஆம் தேதி பிரபாகரனின் உடலை கண்டெடுத்ததாக இலங்கை ராணுவம் ஒரு உடலை காட்டியது. ஆனால் பிரபாகரனின் மனைவி, மகள் பற்றிய நிலை தெரியாது என்று இலங்கை அரசு கூறி வந்தது.
இந்நிலையில் வெளிநாட்டு செய்தியாளர்களிடம் பேசிய, போரின் போது இலங்கை ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உடல்களை போர் முடிவடைந்த மறுநாள் அதாவது மே 20 ஆம் தேதி மீட்டோம் என்று கூறியிருக்கிறார்.
பிரபாகரன் மனைவி மற்றும் மகள் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன. மேலும், பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட நந்திக் கடல் பகுதியில் 150க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் உடல்களும் மீட்கப்பட்டன என்றும் தெரிகிறது.
மேலும், கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனின் மூத்த மகன் சார்ல்ஸ் ஆண்டனியின் உடல் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நடேசன், புலித்தேவன், கேணல் ரமேஷ் ஆகியோரது உடல்களுடன் மீட்கப்பட்டன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.