சென்னை, மார்ச் 25- மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு இன்று காலை கூடியது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்சிக்காததால், மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐ.மு. கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியது.
இந்நிலையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்பி, குஷ்பு மற்றும் முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், செயற்குழு உறுப்பினர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை உருவானதால், மத்திய அமைச்சரவையில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் திமுக விலகியது. இதை செயற்குழு முழுமையாக ஏற்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கான தீர்மானத்தை இந்தியா ஐநா மனித உரிமை ஆணையத்துக்கு எடுத்து சென்று நிறைவேற்ற வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் நடைபெறும் அறப்போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளை மூடுவதையும், காவல் துறை மூலம் போராட்டம் ஒடுக்கப்படுவதையும் செயற்குழு கண்டிக்கிறது. தமிழக மீனவர்களை பாதுகாக்க வலிமையான நடவடிக்கையை மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை நடத்திய இலங்கையில் நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.