மணிலா: ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் கடந்த 5 மாதங்களாகச் சிக்கியிருந்த பிலிப்பைன்சின் மாராவி நகர் கடுமையானப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்நகரை பிலிப்பைன்ஸ் இராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ அறிவித்திருக்கிறார்.
இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான தீவிரவாதக் குழுக்களின் சில இன்னும் போராடிக் கொண்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த போராட்டங்களின் விளைவாக இதுவரை 1000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 4 இலட்சம் பேர் புலம் பெயர்ந்திருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
குண்டுகளின் சத்தம் ஆக்கிரமித்திருக்கும் மாராவி நகர் “பயங்கரவாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றது” என டுடெர்டே அறிவித்தார்.
ஏறத்தாழ 30 பயங்கரவாதிகள் இன்னும் அந்நகரில் இருந்து போராடிக் கொண்டிருப்பதாகவும், சுமார் 20 பிணைக் கைதிகள் அந்த பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், டுடெர்டே அறிவிப்புக்குப் பிறகு இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாராவி நகரில் பயங்கரவாதக் குழுவின் மலேசியத் தலைவரான மாமுட் அகமட் இன்னும் அங்கிருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் பிலிப்பைன்ஸ் இராணுவம் தெரிவித்தது. எனினும் மாமுட் போர் நுணுக்கங்கள் தெரிந்த அச்சமூட்டும் பயங்கரவாதியல்ல என்பதால் அவரது நிலைமை குறித்துத் தாங்கள் கவலையடைவில்லை எனவும் அந்த இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய இராணுவ முன்னேற்றங்களைத் தொடர்ந்து சிதிலமடைந்திருக்கும் மாராவி நகரை மறுநிர்மாணிப்பு செய்து மேம்படுத்தும் பணிகள் இனி தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.