கோலாலம்பூர் – முன்னாள் மலேசியப் பிரதமரும், மலேசியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் பெற்றவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தந்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.
அந்நேர்காணல் நேற்று சனிக்கிழமை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
தந்தி தொலைக்காட்சியின் பிரபல செய்தியாளர் ஹரிஹரன் எழுப்பிய முக்கியக் கேள்விகளுக்கு மகாதீர் பதிலளித்தார்.
அவற்றில் மகாதீரின் இந்தியப் பூர்வீகம் குறித்த கேள்வி இருந்தது. அவற்றை இங்கே காணலாம்:-
ஹரிஹரன்: நீங்கள் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்னு உங்க எதிர்கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள் அதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?
மகாதீர்: இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்?
ஹரிஹரன்: கேரளா என்று சொல்கிறார்கள்.
மகாதீர்: (சிரிக்கிறார்) கேரளான்னு சொல்றாங்க. வட இந்தியான்னு சொல்றாங்க. என் முன்னோர்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எனது முன்னோர்கள் வடஇந்தியாவில் இருந்து இருக்கலாம். ஆனால் அது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை.
ஹரிஹரன்: உங்க அடையாள அட்டையைக் கூட வெளியிட்டார்கள். அதில் உங்களது தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டியென்று இருந்தது. நட்பு ஊடகங்களில் கூட உங்கள் படமும், கேரளா முதலமைச்சர் படமும் ஒன்றாக இணைத்து வெளியிடப்பட்டது. கேரளா முதலமைச்சர் பினராய் விஜயனும் நீங்களும் அப்படியே ஒரே தோற்றத்தில் இருக்கிறீர்கள்.
மகாதீர்: (சிரிக்கிறார்) மலாய்க்காரர்களின் தோற்றத்தைப் பார்த்தீர்கள் என்றால், இந்தியர்கள், அரேபியர்கள், ஏன் சீனர்களின் தோற்ற அம்சங்களைக் கூட பார்க்க முடியும். முந்தைய காலத்தில் நிறைய கலப்பு மணங்கள் நடந்திருக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வந்த இந்தியர்கள் குறிப்பாக இஸ்லாமிய இந்தியர்கள் அவர்களின் இந்திய வம்சாவளியை மறந்து முற்றிலும் மலாய்க்காரர்களாக மாறினாங்க. அவர்களை மலாய்க்காரர்களும் ஏற்றுக்கொண்டார்கள். என்னை எப்படி மலாய்க்காரராக ஏற்றுக் கொண்டார்களோ? அப்படித் தான்.
இவ்வாறு மகாதீர் தனது பூர்வீகம் குறித்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார்.