Home நாடு பெர்னாமா தொலைக்காட்சியில் தமிழ் செய்திகள்! வருமா? வராதா?

பெர்னாமா தொலைக்காட்சியில் தமிழ் செய்திகள்! வருமா? வராதா?

1260
0
SHARE
Ad

header-bernamaகோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் என தொடர்பு, பல்ஊடக அமைச்சர் முன்னிலையில் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட பெர்னாமா தமிழ் செய்திகள் இனியும் வருமா, வராதா – அல்லது இதுவும் வழக்கம்போல் இந்தியர்களுக்கான இன்னொரு கானல்நீர் செய்திதானா என்ற கேள்வி, தமிழ் ஆர்வலர்களிடையே எழுப்பப்பட்டு வருகிறது.

மலேசியாவில் இயங்கி வரும் பெர்னாமா செய்தித் தொலைக்காட்சியில் கடந்த காலங்களில் ஒளிபரப்பப்பட்டு வந்த தமிழ் செய்திகள் ஏனோ சில காரணங்களால் நிறுத்தப்பட்டு  நீண்ட காலமாகிவிட்டன.

ஓர் தேசிய செய்தி நிறுவனமாகச் செயல்படும் பெர்னாமாவுக்கு ஆண்டு தோறும் பல மில்லியன் ரிங்கிட் நிதி அரசாங்கத்தின் மூலம் ஒதுக்கீடு, தகவல் ஒலி, ஒளிபரப்புக்காக செய்யப்பட்டும், அரை மணி நேர தமிழ் செய்திகளை அந்நிறுவனத்தால் வழங்க முடியவில்லையே என்ற மனக்குறை நீண்ட காலமாக இந்திய சமுதாயத்துக்கு இருந்து வந்தது.

#TamilSchoolmychoice

அதிலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தமிழ் செய்திகள் நிறுத்தப்பட்டது ஒரு குறையாகவே பட்டது.

bernama tamil news-mou-25052017
பெர்னாமா தமிழ் செய்திகள் – மே 25-ஆம் தேதி அமைச்சர் சைட் சாலே கெருவாக் முன்னிலையில் அறிவிக்கப்பட்டபோது…

இந்நிலையில், கடந்த 25 மே 2017-ஆம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தொடர்பு பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக் முன்னிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் பெர்னாமா செய்திகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு, அமைச்சர் முன்னிலையிலேயே இதற்கான ஒப்பந்தமும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கும், பெர்னாமாவுக்கும் இடையில் அப்போது கையெழுத்திடப்பட்டது.

எனினும், அறிவிக்கப்பட்ட காலகட்டம் முடிந்து, மாதங்கள் மூன்று கடந்தும் இன்னும் இதற்கான செயல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

பெர்னாமா நேரடியாக தமிழ் செய்திகளை ஒளிபரப்புவதற்கான அத்தனை வசதிகள் இருந்தும், தமிழறிந்த பத்திரிக்கையாளர் குழுமத்தை அந்நிறுவனம் கொண்டிருந்தும், ஏன் தனியார் நிறுவனம் வசம் தமிழ் செய்திகள் ஒப்படைக்கப்படுகின்றன – இந்திய சமுதாயத்தின் மீது அந்நிறுவனத்திற்கு அக்கறையில்லையா – இதுவும் இன்னொரு பொதுத் தேர்தல் கண் துடைப்புதானா – என்பது போன்ற கேள்விகளும் பெர்னாமா தமிழ் செய்திகள் அறிவிப்பு வெளியான காலகட்டத்தில் எழுப்பப்பட்டன.

பெர்னாமாவுக்கு கடப்பாடு இல்லையா?

பெர்னாமா என்பது அரசாங்கத்தின்  சார்பில் தகவல்களையும், செய்திகளையும் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். இதற்காக பல கோடி ரிங்கிட் மான்யமும் அரசாங்கத்தால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

அனைத்து மலேசியர்களுக்கும் செய்திகளைத் தரவேண்டிய கடப்பாடு கொண்ட பெர்னாமாவால் – 24 மணி நேர ஒளிபரப்பை வழங்கிக் கொண்டிருக்கும் அந்த செய்தி நிறுவனத்தால் – ஏன் அரை மணி நேர தமிழ் செய்திகளை வழங்குவதில் மட்டும் இத்தனை தடங்கல்கள் ஏற்படுகின்றன – அதையும் தனியார் வசம் மூலமாகவே வழங்கப்பட வேண்டிய அவசியம் என்ன? – என்பது போன்ற கேள்விகளும் நம் மனங்களில் இயல்பாகவே எழுகின்றன.

இந்தியர் புளுபிரிண்ட் திட்டத்தின் வழி கோடிக்கணக்கான ரிங்கிட் இந்திய சமுதாய மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் – இந்திய சமுதாயத்திற்காக நாங்கள் எவ்வளவோ செய்திருக்கிறோம் என பிரதமர் நஜிப் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் – அரை மணி தமிழ் செய்திக்காக இந்திய சமுதாயம் ஏங்கிக் கிடப்பதும் – அதனை பெர்னாமா தனியார் வசம் ஒப்படைப்பதும் – மிகப் பெரிய முரண்பாடாக இருக்கிறது.

முடங்கிப் போன பெர்னாமா ‘தமிழ் ஒலி’

bernama-radio-launch-samy-vellu-keruak
இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி அதே அமைச்சர் சாலே சைட் கெருவாக், துன் சாமிவேலுவுடன் இணைந்து ‘தமிழ் ஒலி’ வானொலி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த காட்சி

இதேபோன்றுதான் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பெர்னாமா ‘தமிழ் ஒலி’ என்ற தனியார் வானொலி நிகழ்ச்சி வணிக ரீதியாக பெர்னாமா வானொலியில் தொடங்கப்பட்டது.

ஆனால், தொடங்கிய வேகத்திலேயே இந்த நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது.

இப்போதோ, அறிவிக்கப்பட்ட தேதி கடந்து மாதங்களாகியும் பெர்னாமா தமிழ் செய்திகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை.

பெர்னாமா தமிழ் செய்திகள் வருமா?

அல்லது, ‘வரும்…ஆனா வராது’ என்ற நிலைமைதானா?

-இரா.முத்தரசன்