கோலாலம்பூர் – பெர்னாமா தொலைக்காட்சியில் மீண்டும் தமிழ் செய்திகள் என்ற தகவல் செல்லியலில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டதிலிருந்து, இணையப் பரிமாற்றங்கள் வழி பல வாசகர்களும் ‘இது வெறும் பொதுத் தேர்தல் கண்துடைப்புதானா?” – “அரசியல் நாடகமா?” – என்று பல முனைகளில் இருந்தும் கடுமையான கண்டனக் கணைகளைப் பாய்ச்சி வருகின்றனர்.
காரணம், 2015-ஆம் ஆண்டில் பெர்னாமா தமிழ் செய்திகள் அதன் தொலைக்காட்சி அலைவரிசையில் நிறுத்தப்பட்டதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக எத்தனையோ அறைகூவல்கள் தமிழ் அமைப்புகளிலில் இருந்தும், மஇகாவின் அரசியல் தலைவர்களிடமிருந்தும் விடுக்கப்பட்டன.
அப்போதெல்லாம், இது குறித்து எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மௌனம் காத்த பெர்னாமா மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சு தரப்புகள் இப்போது அடுத்த ஓராண்டில் பொதுத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலை நிலவும் வேளையில் மீண்டும் திடீரென தமிழ் செய்திகள் என அறிவிப்பு விடுத்திருப்பது, இந்திய வாக்குகளைக் குறிவைக்கும் பொதுத் தேர்தல் கண்துடைப்பா என பலரும் கேள்விகள் எழுப்பியிருக்கின்றனர்.
24 மணி நேர வானொலி சேவையையும், 24 மணி நேர தொலைக்காட்சி சேவையையும் வழங்கி வரும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பெர்னாமாவுக்கு ஆண்டுதோறும் அரசு மான்யமாக பல வகைகளிலும் கோடிக்கணக்கான ரிங்கிட் வழங்கப்படும் வேளையில், தினசரி அரை மணி நேரத்திற்கு தமிழ் செய்திகள் ஒளிபரப்புவது அவ்வளவு சிரமமான, பிரம்மாண்டமான பணி அல்ல!
தேவை, அரசியல் ரீதியான விருப்பமும், அரசாங்கத் தகவல்களை தமிழறிந்தவர்களுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற முயற்சியும்தான்.
அடுத்த ஓராண்டுக்கு, பொதுத் தேர்தல் குறித்த செய்திகளை மட்டும் ஒளிபரப்பி விட்டு, பொதுத் தேர்தல் முடிந்தவுடன் பெர்னாமா செய்திகள் மீண்டும் பெட்டிக்குள் தூங்கப் போய்விடும் என்ற ஆதங்கமும் சில தரப்புகளில் எழுந்திருக்கிறது.
ஏன் தனியார் மயம்?
இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் என்ற பெயரில் மாபெரும் திட்டங்களுக்கான வியூகங்களை வகுத்து அரசாங்கம் வெளியிட்டிருக்கும் நிலையில், இந்தியர்களுக்கு சென்றடையும் அரை மணி நேர செய்திகள் மட்டும் ஏன் தனியார் மயமாக்கப்படுகின்றது – அதுவும் ஏன் வர்த்தக ரீதியாக மட்டும் ஒளிபரப்பப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது – என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
பெர்னாமாவே ஏன் நேரடியாக அரைமணி நேர தமிழ் செய்திகளை ஒளிபரப்ப முயற்சி எடுக்கக் கூடாது என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
காரணம், இந்திய சமுதாயத்தில் வர்த்தக ரீதியாக தொலைக்காட்சி விளம்பரங்களில் விளம்பரங்களுக்காக செலவிடும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் மிகவும் குறைவுதான். பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியர்களை மட்டும் குறிவைத்து விளம்பரங்கள் செய்ய முன்வருவதில்லை.
இதன் காரணமாக பெர்னாமா தமிழ் செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளை வர்த்தக ரீதியாக தனியார் நிறுவனங்கள் ஏற்று நடத்தும் போது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் கவர்ச்சிகரமாக அறிவிப்புகளோடு தொடங்கப்பட்ட ‘பெர்னாமா ஒலி’ என்ற வானொலி நிகழ்ச்சி.
என்ன ஆனது பெர்னாமா ஒலி?
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பெர்னாமா ஒலி வானொலி தமிழ் நிகழ்ச்சி தொடக்கி வைக்கப்பட்டபோது…
பெர்னாமா ஒலி கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ஆனால், இரவு நேரங்களில் ஒலி பரப்பான இந்தப் பாடல் நிகழ்ச்சியில் மலாய் மொழியில் அறிவிப்புகள் செய்யப்பட்டு அதன் பின்னர் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
இதன் காரணமாக, அடிக்கடி இணையத் தளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, தமிழ்ப் பாடல் இரசிகர்களின் ஆதரவையும் இந்த நிகழ்ச்சி இழந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக அறிகிறோம்.
இதே தொடர்பு பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக்தான் ‘பெர்னாமா ஒலி’ நிகழ்ச்சியையும் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இருப்பினும் மீண்டும் பெர்னாமா செய்திகள் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முயற்சிகள் எடுத்த ‘பி சேனல்’ என்ற தனியார் நிறுவனத்திற்கும், அதன் தலைமைச் செயல் அதிகாரி சிவமணி சுப்ரமணியத்திற்கும் பாராட்டு தெரிவிப்போம்.
பெர்னாமா தமிழ் செய்திகள் குறித்து விடுத்த அறிக்கையில், அரசியல் காரணங்களுக்காக பெர்னாமா செய்திகள் மீண்டும் கொண்டவரப்படவில்லை என்றும், இந்திய சமுதாயம் குறித்த செய்திகளையும், தகவல்களையும் மக்களுக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சிவமணி கூறியிருக்கின்றார்.
பெர்னாமா செய்திகள் மீண்டும் வெற்றிகரமாக உலா வர – நிரந்தரமாக எப்போதும் ஒளிபரப்பாக – வரவேற்பு கூறுவோம்! வாழ்த்து தெரிவிப்போம்!
-இரா.முத்தரசன்