Home Featured தமிழ் நாடு “எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர் நா.காமராசன்” – கவிஞர் மகுடேசுவரன் உருக்கம்!

“எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர் நா.காமராசன்” – கவிஞர் மகுடேசுவரன் உருக்கம்!

2646
0
SHARE
Ad

Na.Kamarasan

கோலாலம்பூர் – வித்தியாசமான திரைப்படப் பாடல்களாலும், புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதிய பாடல்களாலும் புகழ்பெற்ற பாடலாசிரியரும், புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவருமான நா.காமராசன் கடந்த புதன்கிழமை காலமானார்.

இந்நிலையில், கவிஞர் நா.காமராசனின் மறைவு குறித்து கவிஞர் மகுடேசுவரன் கட்டுரை ஒன்றைத் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“தம் படங்களுக்குப் பாடல்கள் எழுத புதுப்புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றைக்கே முனைப்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்ணதாசனோடு எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியான பிரிவு தோன்றியிருந்ததால் அவரை நாடமுடியாத நிலை. மேலும், கண்ணதாசன் சிவாஜியின் படங்களுக்கு அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். ஆகவே, தவிர்க்கவே முடியாமல் வாலி போன்றவர்கள் எம். ஜி. ஆர் படங்களில் தொடர்ந்து எழுதலாயினர். வாலியின் பாடல்கள் கண்ணதாசனே எழுதியவையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தியபோதிலும் கண்ணதாசன் பாடல்களோடு ஒப்பிடுகையில் ஒருபடி தாழ்ந்தே இருந்தன. மேலும் கவிஞர் வாலியும் எல்லாப் படங்களுக்கும் நிறைய பாடல்கள் எழுதி வந்தார். எம்.ஜி.ஆருக்குத் தமிழ் அறிந்த புலவர்கள்மீது அளப்பரிய மதிப்பும் பற்றும் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப் பற்றே தமிழறிஞரான கருணாநிதியோடு அவர் ஆழ்ந்த தோழமை கொள்வதற்குக் காரணம். அவர் எப்போதும் தமிழறிஞர்களையும் புலவர்களையும் மதிப்போடு போற்றியும் ஆதரித்தும் வந்திருக்கிறார் என்பதற்கு நிறைய சாட்சியாளர்களைக் காணமுடிகிறது.”

“எம்.ஜி.ஆர் தம் படங்களுக்காகப் புதிய சிந்தனையாளர்களைத் தேடியதோடு நில்லாமல் அவர்களுக்குத் தம் படங்களில் இயன்றவிடங்களில் எல்லாம் உரிய வாய்ப்பைத் தந்து ஏற்றிவிட்டிருக்கிறார். தமிழ்த் திரையின் அபூர்வமான படைப்புகளைத் தந்த இயக்குநர் மகேந்திரன் எம்.ஜி.ஆர் தந்து புரந்ததால் ஆளானவர் என்பதை அவரது சுயசரிதைப் பக்கங்கள் கூறுகின்றன. இத்தனைக்கும் மகேந்திரன் எம்.ஜி.ஆரின் படங்கள் எவற்றிலும் பங்கு பெற்றவரோ பணியாற்றியவரோ அல்லர். தம் கடைசிக் காலத்தில்கூட திரைப்படக் கல்லூரிக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றைத் தந்து இயக்குநர் பாடப்பிரிவில் மாணவன் ஒருவனைச் சேர்க்க உதவுகிறார். அப்படிச் சேர்ந்த மாணவர்தான் பிற்காலத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வர்த்தகப் படங்களை வெற்றிகரமாக இயக்கமுடியும் என்பதை நிறுவிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார். அவர் முதலமைச்சராக இருந்தபோதும்கூட யார் அவரைச் சந்திக்கச் சென்றாலும் அவரே முன்வந்து கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘சொல்லுங்க. நான் உங்களுக்கு என்ன செஞ்சு தரணும் ?’ என்பதே.”

“பஞ்சு அருணாசலம், புலமைப்பித்தன், முத்துலிங்கம் ஆகியோரும் எம்.ஜி.ஆரின் அறிமுகங்களே. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் நா. காமராசன்.”

“நா. காமராசன் தேனிமாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர். அவ்வூரைச் சேர்ந்த பழங்கவிஞர் கான்முகமது என்பவரிடம் கவிதை இலக்கணத்தைக் கற்றவர். கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றியிருக்கிறார். தாம் கல்லூரியில் தமிழ்ப்பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் பிற வகுப்பு மாணவர்களும் பேராசியர்களும் கதவு ஜன்னல்கள் எல்லாம் முகமாக நின்று தம் பாடங்களை ஆர்வத்தோடு கவனிப்பார்கள் என்று நா. காமராசன் கூறியிருக்கிறார். முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ஆகியவர்களோடு இளமையில் திராவிட இயக்கத்தின் தனித் தமிழ்நாடு கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார். அதற்காகச் சிறைக்கும் சென்றிருக்கிறார். சிறையில் அவர் கால்விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்தார். தாமரை, முரசொலி, மன்றம், காஞ்சி, காதல், சுரதா, தீபம் ஆகிய பத்திரிகைகளில் அவர் கவிதைகள் எழுதி வெளியிட்டார். தம் இலக்கியத் தாய்வீடு என்று தாமரை இதழைக் குறிப்பிடுகிறார்.”

“கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் இறுதியில் அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுவே தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதை வடிவம் துளிர்விடத் தொடங்கியிருந்த நேரம். எழுத்து இதழில் கவிதை எழுதியவர்கள் புதுக்கவிதையின் உள்ளடக்கத்தோடு தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் நா. காமராசன் மரபுக் கவிதையைப் போன்றே சந்தச் சொற்றொடர்களில் புதுப் பதச்சேர்க்கைகளைத் தம் கவிதைகளில் பயன்படுத்தினார். அந்த உருவம் அப்போதைய காலக்கட்டத்தில் மிகவும் புதிதாக இருந்திருக்க வேண்டும். அப்போதைய காலத்திற்கேற்ற புதுமைகளை அவர் செய்ததால் நா. காமராசனின் கவிதைகள் பெரும் புகழைப் பெற்றன. ஒரு வகையில் அவர் வானம்பாடிகளுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.”

“இரவெரிக்கும் பரிதியை – ஏழை
விறகெரிக்க வீசுவேன்
ஒளிகள் பேசும் மொழியிலே – நான்
இருள்களோடு பேசுவேன்

என்றெல்லாம் அமைகிறது அவர் கவிதை. இந்தப் போக்கைக் கவிஞர் கண்ணதாசன் போன்ற மரபை மட்டுமே எழுதிய கவிஞர்களும் முன்வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். அதை நா. காமராசனின் ‘சூரிய காந்தி’ கவிதைத் தொகுப்புக்குக் கண்ணதாசன் வழங்கிய முன்னுரையால் உணர முடிகிறது. ‘ஒரு நூலுக்கு முன்னுரை என்பது யானைக்குத் தந்தத்தைப்போல’ என்பது நா. காமராசனின் கருத்து. பிற்காலத்தில் வாரப்பத்திரிகைகளில் வெளியாகி சாதாரணமான வாக்கிய அமைப்புகளாகிப் போன போக்குகளுக்கும் அவரிடமே தோற்றுவாய்களைக் காணமுடிகிறது.”

“இந்தியாவிற்கு சுதந்திரம் வந்தபோது

நான் மட்டும் அடிமையானேன் 

ஆம் ! அன்றுதான் நான் 

ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டேன்.”

“திருமணத்திற்குப் பிறகு / இரண்டு பேர் ஒருவராய் மாறுகிறார்கள்

அதற்குப் பிறகு

அவர்கள் இரண்டுபேரும் சண்டை போடுகிறார்கள்  ஏன் ?

‘அந்த ஒருவர்’

 யார் என்று தீர்மானம் செய்வதற்காக.

– என்பதைப் போன்றவற்றை ‘சித்திர மின்னல்கள்’ எனத் தம் தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார்.”

“உருவகக் கவிதை வடிவத்தை அவரே முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். கறுப்பு மலர்கள் என்னும் அவருடைய சொல்லாட்சி நீக்ரோக்களைப் பற்றிய உருவகம் ஆகும்.”

“நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் / ஆடை வாங்குவதற்காக… என்பது விலைமகளைப் பற்றிய அவருடைய புகழ்பெற்ற வரி.”

“நடைப்பிணங்கள் என்ற தலைப்பில் கறுப்பு மலர்கள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மலைவாழ் பளியர் குலத்தின் சோக வாழ்க்கைப் பாடல்-

‘நடையிலொரு தவவேகம்

 நயனத்தில் புத்த நிழல்

 குடிசைகளில் துறவுநெறி

 நாங்கள் காட்டு மூலிகைபோல் 

கண்டெடுக்க முடியாமல்

 ஓட்டைக் குடிசைகளில்

உயிர்வாழும் நடைப்பிணங்கள்’

-என்று முடிகிறது. ஒருவேளை தமிழ்ப் புதுக்கவிதையில் எழுதப்பட்ட விளிம்பு நிலை மக்களைப் பற்றிய முதல் வரிகளாக நா. காமராசனின் இவ்வரிகளே இருக்கக் கூடும்.”

“நா. காமராசனைக் கவிதையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதா. சுரதாவைப் போலவே நா. காமராசனிடமும் புதிய உவமைகளைக் காணமுடிகிறது. உவமை தரும் இன்பம் என்பது யாப்பு நமக்கு நல்கிய அரிய செல்வம். மொழி தள்ளாடி நடந்த ஆதிகாலத்தில் ஒவ்வொன்றும் உவமையின் வழியாகத்தான் எடுத்துச் சொல்லப்பட்டுக் கருத்துப் பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும். உவமை எதிர்பாராத திசையிலிருந்து மின்னலைப் போல் தோன்றும்போது அது உணர்த்த விரும்பும் பொருள் இடியைப் போல் இறங்குகிறது.”

“நா. காமராசன் உவமைகளை உருவாக்குவதில் அதிக ஈடுபாடு காட்டியவர்.

கரிகால் வளவனின் கால்போல் கறுத்த மேகம் –

போர்க்களத்தில் ஓடுகின்ற தேர்கள்போலப் புதுவெள்ளம் –

விதைநெல்லின் மூட்டையைப்போல் தூக்கிக்கொண்டு விரித்திருந்த மெத்தைக்குக் கொண்டு போனான் –

நிழல்பந்தல் போட்டதுபோல் நின்றிருக்கும் புளியந்தோப்பு –

நினைவுகள் திரும்பிவர நீர்வீழ்ச்சி போலழுதாள் –

வைகைநதித் தண்ணீர்போல் அடக்கம் –

என அவரின் உவமைக் கணக்குகள் ஏராளம்.”

“ஒரே சொல்லை இருபொருள்படும்படிக் கையாள்வதைச் சிலேடை என்பார்கள். அப்படிப்பட்ட சிலேடை வாக்கியங்களை அமைப்பதில் நா. காமராசன் கெட்டிக்காரர். நா. காமராசனை நான் தேடிப் படிக்கத் தூண்டியவையே அவருடைய சிலேடை வரிகளில் எனக்கேற்பட்ட ஆர்வம்தான்.”

“வஞ்சிக் கோமான் விழிகள் சந்திக்கின்ற வஞ்சிக்கோ மான்விழிகள் /

தன்னிழலைத் தண்ணீரில் விழவைக்காமல் தண்ணிழலை வளர்க்கின்ற மண்டபம் / நிலையான தண்மையுள்ள எழிலே வாழ்வின் நிலையாமைத் தன்மையுள்ள நிழலே /

வஞ்சியாளும் சேரமன்னர் வஞ்சியாது இவ்வஞ்சியாளைச் சேர்ந்த மன்னர் / வெஞ்சமரில் வேல்மன்னர் வாள்மன்னர் என் வேல்விழியில் வாழ்மன்னர் / கொஞ்சுகின்ற மலரிதழ்மேல் அரும்பு மீசை கொண்ட மன்னர் கொடையருளில் கொண்டல் மன்னர்

– இவையெல்லாம் சிறுவயதில் என்னை உடனே ஈர்த்து நின்றன.”

“பிற்காலத்தில் சிலேடைப் பயன்பாடுகள் வழக்கொழிந்துவிட்டாலும் அது தரும் சுவைக்கென்று ஒரு தனி மதிப்பு என்றும் இருக்கவே செய்யும். சிலேடைகள் தற்காலக் கவிதைகளில் காணப்படாமைக்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது அது புலமையைக் கொண்டு விளையாடும் ஆட்டமாக இருக்கிறது என்பதைத்தான். தற்காலக் கவிஞர்களுக்கு மொழிப்புலமையோடு எந்த ஒட்டுறவும் இல்லை. புழக்கத்தில் உள்ள சிலவாயிரம் சொற்களைக் கொண்டு இங்கே பலருக்கும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் குறைபட்டுக் கூறுவீர்களேயானால் நவீனம் என்ற குத்தை விட்டு உங்களைப் படுக்கப்போட்டுவிடுவார்கள்.”

“தொட்டில் குழந்தைக்கு ஒரு தாலாட்டுப்பாடல் வடிவில் அவர் எழுதிய கவிதை ஒன்று.

தொட்டில் துணி முரடோ இல்லை இவன்
தோளெலும்பும் பூதானோ
ஆரோ எவரோ நீ
அடிவயிற்றுப் புதையலோ
உன் உதையெல்லாம் ஒத்தடமோ
உமிழ்நீர் இளநீரோ

புதுக்கவிதையில் நாட்டுப்புறப் பாடல் அமைப்பில் முதலில் எழுதிப் பார்த்தவரும் அவரே.
அழகு என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அவர் பட்டியல் ஒன்றைப் போட்டு எழுதிய வரிகள் இவை. இந்தக் கவிதை பிற்பாடு எப்படிப்பட்ட திரைப்பாடலானது என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மங்கைக்குக் கண்ணழகு ! துள்ளுகின்ற
மானுக்குப் பேரழகு வெள்ளைப்புள்ளி !
செங்கதிர்க்குப் பேரழகு ஒளிநெருப்பு !
சேய்மீன்கள் தானழகு பொய்கைத் தாய்க்கு !
சங்கிற்கு நிறமழகு ! தேய்ந்துபோகும்
சந்தனந்தான் மார்பிற்கு அழகு ! நல்ல
தங்கநகை கழுத்திற்கு அழகு ! என்றன்
தம்பிக்கோ தனியழகு குழந்தைப் பேச்சு !

‘நீதிக்குத் தலைவணங்கு’ என்னும் திரைப்படம் வாயிலாக நா. காமராசன் திரைப்பாடல் எழுத வந்தார். அவருடைய நூற்றுக்கணக்கான பாடல்களில் வெற்றிபெற்ற பாடல்கள் பல.”

“கனவுகளே ஆயிரம் கனவுகளே, போய்வா நதியலையே, விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான், ஓ மானே மானே உன்னைத்தானே, மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ, ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே – ஆகிய பாடல்கள் அவர் எழுதியவற்றில் என்னைக் கவர்ந்தவை.”

“மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் சிறப்பு. கவிஞனுக்கே உரிய கௌரவத்தோடு,தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக நின்றுகொண்டார். தாம் திரைத்துறைக்குப் பாடல் எழுதிய அனுபவங்களைப் பிற்காலத்தில் தம் கவிதையொன்றில் பதிவு செய்கையில் ‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்று கசப்போடு கூறுகிறார். ‘பூபாள ராகம் புயலோடு போனதுபோல் ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்ததுபோல் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்’ என்று மனம் வெதும்பிச் சொன்னார்.”

“திரையுலகம் அவருக்கு அநீதி இழைத்திருக்குமெனில் அதற்காக அது வெட்கப்படவேண்டும். உரிய கன்னிமையோடும் தூய பேரழகோடும் வளர்ந்த பெண்களைத் தன்னில் இழுத்து அழுக்காக்கிச் சக்கையாக்கித் துப்பிவிடும் அந்த மாய உலகம் நா. காமராசனுக்கும் அதையே செய்ததில் வியப்பொன்றுமில்லை. இப்படி எத்தனையோ வெள்ளை உள்ளங்களை வாட்டித் துன்புறுத்திப் பாவக்கடலாக மாறி நிற்கும் திரையுலகம் தனக்கான தண்டனையை உரிய மீட்பர் யாருமேயில்லாமல் ‘இடுமுதல் எட்டணாவிற்கு நம்பகமில்லாத ஒரு தொழிலாக’ மாறி தற்காலத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.”

“ஏ.வி.எம்மின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ திரைப்படத்தில் நா. காமராசன் எழுதிய பாடல் ‘சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்பது. நா. காமராசனின் தமிழ் ஆட்சியும் சொல்லழகும் சந்தத்தோடு மெல்ல வழிந்து இதயத்தை வேதனைக்கடலில் மூழ்கடிக்கும் பாங்கும் அப்பாடலில் உண்டு. கேட்பவர் எவரும் பாடலின் இறுதியில் விழிக்கடை நீர்த்திரளைத் துடைக்காமல் எழமுடியாதபடி இருக்கும் அப்பாடல். பாடிய ஜேசுதாஸின் குரலில் அத்தனை உருக்கம் பாடலெங்கும் பனியாக மூடியிருக்கும்.”

“நானே எனக்கு நண்பன் இல்லையே என்று போக்கிரித்தனமாக சுற்றியலைந்த நாயகன் காதலுற்றுத் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டு உன்னதமான நிலைக்கு வருவான். அவர்களுடைய காதல் வாழ்வுக்கு சாட்சியாக ஒரு மகள் பிறந்திருப்பாள். அச்செல்ல மகள் தந்தைசொல் மீறித் தன் தலைவனைத் தேடி மணந்து பெற்றவரை நீங்குவாள். தன் இழிவுகள் அனைத்தையும் ஏற்றுச் சகித்துத் தன்னையும் சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்கிய தன் காதல் மனைவி வெந்து துடிப்பதைக் காணமுடியாத நிலையில் நாயகன் பாடும் பாடல் அது. பிரிவுத் துயரமும் உறவுகளின் நிலையாமையும் அந்தப் பாடல் வரியெங்கும் பிசினாக ஒட்டியிருக்கும்.”

சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா ?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா ?

சிட்டுக்குருவி நம் மகள். நம் இல்லக்கூட்டில் செல்லச் சிட்டாகப்பிறந்த ஒரே மகள். உணவையும் உயிரையும் வாயிட்டு ஊட்டி வளர்த்த அன்புச் சிறுவள். அந்தச் சிட்டுக் குருவிக்குச் சிறகு முளைத்துவிட்டது. சிறகு முளைத்ததும் கொஞ்சமும் காத்திருக்காமல் அவசரப்பட்டுப் பறந்து போய்விட்டாளே ! ரத்தத்தைப் பொழிந்து வளர்க்கப்பட்டவள், ரத்த உறவாக என்றும் இருந்து நம்மீது அன்பு செலுத்த வேண்டியவள் – அவளோடு இருந்த அத்தனை உறவும் தன் மணவாளனைத் தேடிப் பறந்ததில் கிளைபோல் முறிந்துவிட்டதே ! நாம் இந்த வாழ்வில் பெற்ற ஒரே பேறு நான் தந்தை என்பதும் நீ தாய் என்பதும்தான். அந்தப் பேற்ற நமக்குப் பிறந்து வழங்கியவள் நம் மகள். அவளே நம்மைத் துறந்து சென்றுவிட்டபிறகு அந்தப் பெருமையைக் கூட நாம் இழந்துவிட்டோமா ? அவளே இல்லையென்றால் நான் தந்தையும் இல்லை, நீ அன்னையும் இல்லையே ! இல்லை இது வெறும் கனவுதானா ? அல்லது அப்போதைக்கு நின்று நிலவிப் பின் மறந்தி நீங்கிவிடவேண்டிய நினைவா ? சொந்தம் என்பது பிறப்போடு வருவது. பந்தம் என்பது வாழ்வின் நிகழ்வுகளில் வந்து சேர்வது. அப்படி நெஞ்சோடு பந்தமாக வந்து சேர்ந்தவை எல்லாமே என்றும் தொடரும் தொடர்கதையா ? அல்லது அவ்வப்போது முடிந்துவிடும் சிறுகதையா ?”

“நாம் போடும் மேடைகளே நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம்
கூடி வாழக் கூடு தேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம் ?
தாயென்னும் பூமாலை தரை மேலே வாடுதே !

இந்த உலகில் நாம் நடந்துகொள்ளும் நிகழ்வுகள் எல்லாமே நாடக மேடை நிகழ்வுகளே. அவை வெறும் போலிகள். நாம் நம்பிப் பயணிக்கும் ஓடங்களாகிய உறவுகள் எல்லாமே மூழ்கி உருவழியும் காகித ஓடங்களே. பாசம் என்றா சொல்ல முடியும் ? எல்லாமே வெறும் வேஷம் என்பதாகத்தானே இருக்கிறது ? அல்லது காலம் இட்டுக் காட்டுகிற வண்ணக்கோலங்களா இவையெல்லாம் ? ஜோடிக்குருவிகளாக இருந்த நம்மோடு கூடிவாழ்வதற்காக நம் உறவுக் கூட்டுக்கு ஓடி வந்த ஜீவன் நம் மகள். சிறகு முளைத்ததால் ஆடிப் பாடி மகிழ்வதற்காக நம் பாதுகாப்பான கூட்டைவிட்டு அது காட்டுக்குப் பறந்து போய்விட்டதே. அந்தக் காட்டில் அந்தச் சிறுகுருவியைக் கொத்தித் தின்பதற்காக எத்தனை எத்தனை பருந்துகளும் வல்லூறுகளும் வட்டமிடுகின்றனவோ ! அந்தத் துயரத்தில் அவளைப் பெற்ற தாயென்னும் இந்தப் பூமாலை தரைமேலே வாடி வதங்குகின்றதே !”

“காலங்கள் மாறிவரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலைக் கூறுவதெங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை
பாச தீபம் கையில் ஏந்தி வாழவந்த வேளை
கண்கள் ஆடப் பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே !

புரிகிறது. காலங்கள் மாறிவருகின்றன. அதற்கேற்ப மாறிவிட்ட காட்சிகளைத்தான் இங்கே காண்கிறேன். என் மகள் பிரிந்துபோனது பருவத்தின் நிர்ப்பந்தம், ஒருநாள் மனம் மாறித் திரும்பவருவாள் என்றெல்லாம் நியாயங்கள் சில இருக்கலாம். ஆனால், அந்த நியாயங்கள் எங்களுக்கு ஆறுதலைக் கூறுவதில்லை. மஞ்சளும் குங்குமமும் மார்புச் சந்தனமும் சூடுகின்ற எங்கள் கன்னிப் பாவை எங்கள் குலவிளக்கு. பாசத்தின் ஒளிவிளக்கைத் தன் திருக்கரங்களில் ஏந்தி எங்களோடு வாழ்வதற்காக வந்த வேளை இது என்று எண்ணியிருந்தோம். தன் கண்கள் ஒருவனைக் கண்டு காதலில் ஆடிவிட்டதால் அவள் புதிதாக அடைந்திருக்கும் பெண்மை அவளது எண்ணத்திற்கு ஒத்துப்பாடி விட்டதால் இன்பம் கண்டு மகிழும் வழியில் வளர்ந்த மங்கையாகிச் சென்றுவிட்டாள். சரி அதற்காக அவளைச் சபிக்கவா முடியும் ? தாயும் தந்தையுமாகிய நாங்கள் கெட்டு அழிவுற்று வாடி நின்றாலும் அவள் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும் !”

“மகளைப் பெற்றவர்கள் எவரும் இந்தப் பாடலின் ஆழத்தை இன்னும் அதிகமாக உணர முடியும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னை அடர்த்தியான மௌனம் சூழ்ந்துகொள்ளும். அது நானும் மகளைப் பெற்றவன் என்பதாலோ என்னவோ !” – இவ்வாறு கவிஞர் மகுடேசுவரன் தெரிவித்திருக்கிறார்.