Home நாடு தமிழ் செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்? – பெர்னாமா தலைவர் விளக்கம்

தமிழ் செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்? – பெர்னாமா தலைவர் விளக்கம்

844
0
SHARE
Ad

header-bernamaகோலாலம்பூர், பிப்ரவரி 19 – மலேசிய தேசிய தொலைக்காட்சி நிறுவனமான பெர்னாமாவில் உள்ள சில பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாததால், தமிழில் செய்தி ஒளிபரப்ப இயலாத சூழ்நிலையில் அந்நிறுவனம் உள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் டத்தோ சுல்கிப்ளி சாலே கூறுகையில், “தற்போது பிரச்சனைகளுக்கான இடைக்கால முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நிரந்தர தீர்வு காண இன்னும் சில காலம் எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

“பெர்னாமா தமிழ் செய்திகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு செய்தி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் மிகவும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. எனவே அதற்கு விரைவில் அந்நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும்” என்று மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜா சந்திரா அண்மையில் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

அதற்கு விளக்கமளித்துள்ள சுல்கிப்ளி, பெர்னாமா தொலைக்காட்சியின் பணியாளர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பட்டு விட்டது என்றும், பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி வழங்கப்படும் என்றும், இந்த பிரச்சனைகள் தீர நீண்ட காலம் எடுக்காது என்றும் கூறியுள்ளார்.

பெர்னாமா தொலைக்காட்சி சினர்ஜி நிறுவனத்துடன் 33 சதவிகித பங்குதாரர்களாக இணைந்து, கடந்த 2008-ம் ஆண்டு 24 மணி நேர அலைவரிசையாக பெர்னாமா தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

எனினும், தற்போது அந்நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், பணியாளர்களுக்கு ஊதியங்களை வழங்கவும், செலவுகளை ஏற்கவும் திணறி வருகின்றது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, பெர்னாமா தொலைக்காட்சி நிறுவனத்தின் பணியாளர்கள், தங்களுக்கு ஜனவரி மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி பணிக்கு திரும்ப மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சரான டத்தோஸ்ரீ அகமட் சாபெரி சீக், அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 100 பணியாளர்களுடன் அமர்ந்து, அவர்களின் பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.