மஇகா சார்பாக புதிதாக நியமனம் பெற 4 செனட்டர் பதவிகள் காலியாக இருக்கும் நிலையில் இதுவரையில் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மட்டுமே செனட்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மஇகா சார்பான மேலும் 3 செனட்டர் பதவிகள் இதுவரையில் நிரப்பப்படவில்லை.
பொதுவாக நாடாளுமன்ற மேலவையின் கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளில் புதிய செனட்டர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவர். அந்த வகையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற மேலவை கூட்டத் தொடரின் முதல் நாளில் மற்ற கட்சிகளின் சார்பிலான இரண்டு புதிய செனட்டர்கள் பதவியேற்றனர்.
ஆனால், மஇகா சார்பாக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து காலியாக இருக்கும் மஇகா சார்பான 3 செனட்டர் பதவிகளுக்கான நியமனங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அல்லது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற ஆரூடங்களும் இன்னொரு கோணத்தில் கூறப்படுகின்றன.
இந்நிலையில், மஇகாவின் புதிய செனட்டர்களுக்கான நியமனம் 14-வது பொதுத் தேர்தல் முடிந்த பின்னரே செய்யப்படும் என்றும் அல்லது மஇகாவின் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் அதே தருணத்தில், புதிய செனட்டர்கள் நியமனங்களும் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-இரா.முத்தரசன்