Home நாடு அன்வாரை மருத்துவமனையில் சந்திக்கிறார் மகாதீர்!

அன்வாரை மருத்துவமனையில் சந்திக்கிறார் மகாதீர்!

802
0
SHARE
Ad

mahathir-anwar-ibrahimகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (7 ஜனவரி 2018) நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்ட துன் மகாதீர் நாளை புதன்கிழமை செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்திக்கிறார் என பிகேஆர் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நவம்பரில் தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அன்வார் ‘செராஸ் ரிஹேபிலிடேஷன் ஹாஸ்பிட்டல்’ என்ற மருத்துவமனையில் தங்கியிருந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அதிகாரபூர்வமாக அவரது சிறைவாசம் இன்னும் முடிவடையவில்லை.

Anwar Mahathir 1
சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற வளாகத்தில் மகாதீரும் – அன்வாரும் சந்தித்துக் கொண்ட போது…

அன்வார் ஜூன் 8-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என மலேசிய சிறைச்சாலைத் துறை அறிவித்திருக்கிறது. அந்தத் தேதிக்கு முன்பாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்ற ஆரூடங்கள் கூறப்படுகின்றன. காரணம் அன்வாரை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து, அதன் பின்னர் பொதுத் தேர்தலை சந்திக்கும் துணிச்சல் தேசிய முன்னணிக்கு இல்லை என்பதை விளக்கத் தேவையில்லை.

#TamilSchoolmychoice

மகாதீரின் நியமனம் நாடு முழுமையிலும் பரவலான ஆதரவைப் பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சிக் கூட்டணியிலேயே சில சலசலப்புகள் எழுந்திருக்கின்றன.

பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் சுரைடா கமாருடின் மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டியதில்லை மாறாக, மூத்த அமைச்சராக நியமித்தால் போதும் எனக் கூறியிருக்கிறார்.

மறைந்த கர்ப்பால் சிங்கின் புதல்வி சங்கீத் கவுர் தனது தந்தை உயிரோடு இருந்தால் மகாதீரை எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமராக முன்மொழியப்பட ஒப்புக் கொண்டிருக்கமாட்டார் எனக் கூறியிருக்கிறார்.

மகாதீரும் தன்னைப் பிரதமராக முன்மொழிய ஒப்புக் கொண்ட அன்வார் இப்ராகிமிற்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் செராஸ் மருத்துவமனையில் நடைபெறவிருக்கும் மகாதீர் – அன்வார் இடையிலான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.