மும்பை – போட்டியும் பொறாமையும் நிறைந்ததாக அடிக்கடி வர்ணிக்கப்படும் மும்பை திரையுலகத்தின் முன்னணிக் கதாநாயகனான அக்ஷய் குமார் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கும் ‘பத்மாவதி’ திரைப்படத்திற்கு வழிவிடும் வகையில் எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகவிருந்த தனது ‘பேட்மேன்’ ( Padman) படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்தி வைத்திருக்கிறார்.
பத்மாவதி வெளியாகப் போகும் அதே ஜனவரி 25-ஆம் தேதிதான் அக்ஷய் குமாரின் பேட்மேன் படமும் வெளியிடப்படவிருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை பத்மாவதி திரைப்படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அக்ஷய் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“இந்த நேரத்தில் நமது உதவி பன்சாலிக்கு மிகவும் தேவைப்படுகிறது அதனால் நான் எனது படத்தின் வெளியீட்டு தேதியை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கிறேன்” என அக்ஷய் குமார் தெரிவித்தார்.
அக்ஷய் குமாரின் இந்த செயலுக்கு நான் எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன் என்று பன்சாலியும் கூறியுள்ளார்.