புதுடில்லி – டில்லி மாநிலத்தை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெள்ளிக்கிழமை அதிரடியாக அறிவித்திருப்பதை அடுத்து, டில்லியில் மீண்டும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லி உயர்நீதிமன்றத்தை அணுகி தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரா தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், ஆம் ஆத்மிக்கு சாதகமாக முடிவை வழங்கவில்லை. விண்ணப்பித்தபடி தடையுத்தரவையும் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
இதன் காரணமாக தேர்தல் ஆணையத்தின் முடிவு மறு உறுதிப் படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதால் கெஜ்ரிவால் டில்லி சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு மீண்டும் டில்லி சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வழிவிடலாம் என ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்திருக்கின்றன.