கோலாலம்பூர் – நான்கு கட்சிகளின் கூட்டணியாக உருவாகியிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் ஒரே சின்னமாகவும், ஒரே கூட்டணியாகவும் பதிவு செய்யப்பட செய்து கொள்ளப்பட்டிருக்கும் விண்ணப்பத்திற்கு இன்னும் அனுமதி அளிக்காமல் தாமதித்து இழுத்தடித்து வரும் சங்கப் பதிவிலாகாவை துன் மகாதீர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இவ்வாறு தாமதிப்பதால் சங்கப் பதிவிலாகா மறைமுகமாக அம்னோவுக்கும், தேசிய முன்னணிக்கும் உதவ முயற்சி செய்கிறது எனவும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவருமான மகாதீர் குற்றம் சாட்டினார்.
“செ டெட்” (Che Det) என்ற தனது சொந்த வலைப் பதிவில் அடிக்கடி தனது கருத்துகளைப் பதிவிட்டு வரும் மகாதீர் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பதிவை சங்கப் பதிவிலாகா தாமதித்து வரும் போக்கு குறித்தும் பதிவிட்டிருக்கிறார்.
“சங்கப் பதிவிலாகா தீய உள்நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏழு மாதங்களுக்கு முன்னர் நாங்கள் பக்காத்தானுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாலும், இதுவரையில் எங்களின் கடிதங்களுக்கும் பதிலளிக்கவில்லை. எங்களின் விண்ணப்பத்தையும் அங்கீகரிக்கவில்லை. நாங்கள் இரண்டு முறை சங்கப் பதிவிலாகாவோடு சந்திப்புகள் நடத்திய பின்னரும் அவர்கள் இதுவரை அதிகாரபூர்வமான பதில் எதனையும் வழங்கவில்லை. பொதுவில் சங்கப் பதிவிலாகா அறிக்கை விடுத்தாலும் ஆனால் என்ன பிரச்சனை என்பது குறித்து எங்களுக்கு நேரடியாக எந்த விளக்கத்தையும் இதுவரை வழங்கவில்லை” என்றும் மகாதீர் மேலும் கூறியிருக்கிறார்.