தானாராத்தா – கேமரன்மலை, தானாராத்தா சுப்ரமணியர் ஆலய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற மைபிபிபி பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு திளராக வருகை தந்து ஆதரவு வழங்கிய வட்டார மக்களுக்கு மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய வரலாற்றைப் படைத்தது” என டான்ஸ்ரீ கேவியஸ் இந்த நிகழ்ச்சி குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வர்ணித்தார்.
“கேமரன்மலையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற பொங்கல் திருநாளை கேமரன்மலை மைபிபிபி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு வட்டார மக்கள் வற்றாத ஆதரவை வழங்கியுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். பொங்கல் திருநாளை கேமரன்மலையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என நமது ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கேற்ப இம்முறையும் பொங்கல் திருநாள் இங்குக் கொண்டாடப்பட்டது” என்றார் அவர்.
இவ்வாண்டிற்கான பொங்கல் கொண்டாட்டத்தில் 100 பேர் கலந்து கொண்டு பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதனையும் தாண்டி 123 பேர் பொங்கல் வைப்பதற்காகத் திரண்டனர்.
பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த கேமரன்மலை மைபிபிபி மட்டுமின்றி டான்ஶ்ரீ கேவியசும் இந்த அபரிதமான ஆதரவைக் கண்டு உற்சாகமடைந்து, உடனடியாக கூடுதல் பங்கேற்பாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்தனர்.
காலை 9.00 மணிக்குத் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டத்தில் மைபிபிபியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தமிழர் பண்பாட்டு உடையான வேட்டி-ஜிப்பாவுடன் வந்திருந்தார்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மைபிபிபி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டுமெனத் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வரும் கேவியஸ் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக கேமரன்மலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாக்காளர்களைச் சந்தித்து தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் மேலும் பல ஆதரவாளர்களும் இந்தப் பொங்கல் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய கேவியஸ், பொங்கல் திருநாள் தொடர்பான விளக்கங்களை வழங்கியதோடு, கேமரன்மலை மக்களை ஒன்றிணைத்த விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது என்றும் பாராட்டினார்.
இதனிடையே, மைபிபிபி ஏற்பாட்டிலான பொங்கல் கொண்டாட்டத்திற்கு திரளாக வருகை புரிந்து ஆதரவை வெளிப்படுத்திய அனைவருக்கும் கேமரன்மலை மைபிபிபி தொகுதித் தலைவர் டத்தோ கண்ணதாசன் என்ற கண்ணாவும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி ஆற்றிவரும் சேவைகளை இங்குள்ள மக்கள் நன்கு அறிவர் என நினைவுபடுத்திய டத்தோ கண்ணா, கேமரன் மலையில் பல்வேறு சேவைகளையும், செயல் திட்டங்களையும் செயல்படுத்தி வரும் மைபிபிபி கட்சிக்கு இங்குள்ள மக்களும் நல்ல ஆதரவை வழங்கி வருகின்றனர் என்றும் கூறினார்.
தானா ரத்தாவில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் பலரும் திரளாகத் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர். பிற்பகல் 2.00 மணியளவில் இந்தப் பொங்கல் விழா நிறைவு பெற்றது.