கோலாலம்பூர் – சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘பத்மாவத்’ (தமிழில் ‘பத்மாவதி’) திரைப்படம், பல தடைகளுக்குப் பிறகு, கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் வெளியாகி, 4 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியது.
மலேசியாவில் அத்திரைப்படம் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலேசியத் தணிக்கை வாரியம் அத்திரைப்படத்திற்குத் தடை விதித்திருக்கிறது.
இஸ்லாமியர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விவகாரங்களை அத்திரைப்படம் தொட்டுப் பேசி இருப்பதாக மலேசியத் தணிக்கை வாரியம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மலேசியத் தணிக்கை வாரியத்தின் தலைவர் முகமது ஜாம்ப்ரி அப்துல் அஜிஸ் கூறுகையில், “மலேசியா இஸ்லாமியர்கள் நிறைந்த நாடு. இத்திரைப்படம் இஸ்லாமியர்களின் உணர்வுப்பூர்வமான விவகாரங்களை பேசியிருக்கிறது. அதனால் இங்கு வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, இத்திரைப்படத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த மலேசிய ரசிகர்கள் தடை அறிவிப்பை அறிந்து, நட்பு ஊடகங்களில் தங்களது ஏமாற்றங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.