Home தேர்தல்-14 பாரிசான் வெற்றி பெற்றால் சுங்கை பட்டாணிக்கு 25 மில்லியன் ஒதுக்கீடு: சாஹிட்

பாரிசான் வெற்றி பெற்றால் சுங்கை பட்டாணிக்கு 25 மில்லியன் ஒதுக்கீடு: சாஹிட்

896
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், சுங்கை பட்டாணி நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி (பாரிசான்) வெற்றி பெற்றால், 25 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்வதாக பராமரிப்பு துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி வாக்குறுதி அளித்திருக்கிறார்.

அந்நிதியில் 10 மில்லியன் ரிங்கிட், சுங்கைப் பட்டாணி நாடாளுமன்றத் தொகுதியில் 2,000 பேர் அமரக் கூடிய அளவிலான அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகம் கட்டுவதற்காகவும், பந்தாய் மெர்டேக்கா, பக்கார் ஆராங் மற்றும் சிதாம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தலா 5 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்றும் சாஹிட் தெரிவித்தார்.

“இவ்வளவு வெப்பத்தில் சுங்கைப் பட்டாணி வாக்காளர்கள் நிற்க வேண்டிய நிலையை எண்ணி வருந்துகிறேன். குளிரூட்டப்பட்ட அரங்கம் இருந்தால் இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை.

#TamilSchoolmychoice

“ஷஹானிம் (ஷஹானிம் முகமது யூசோப்) சுங்கைப் பட்டாணி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால், அரசாங்கம் இந்த இரண்டு வாக்குறுதிகளையும் கண்டிப்பாக செய்யும், அதேவேளை மற்ற மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் இதனால் பயனடையும்” என்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுங்கைப் பட்டாணியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாஹிட் தெரிவித்தார்.

கெடா மாநிலம் சுங்கைப் பட்டாணி தொகுதியில் கடந்த மூன்று பொதுத்தேர்தல்களிலும் பிகேஆர் கட்சி அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து வருகின்றது. பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஜோஹாரி பின் அப்துல், கடந்த இரண்டு தேர்தல்களாக அத்தொகுதியில் வெற்றி பெற்று வருகின்றார்.

கடந்த 13-வது பொதுத்தேர்தலில், அம்னோ வேட்பாளர் இஸ்மாயில் அனுவாரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோஹாரி பின் அப்துல், 44,194 வாக்குகள் பெற்று, 9,548 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், 14-வது பொதுத்தேர்தலில், பிகேஆர் சார்பில் மீண்டும் போட்டியிடும் ஜோஹாரி, இம்முறை, அம்னோ வேட்பாளர் ஷஹானிம் முகமது யூசோப், பாஸ் வேட்பாளர் ஷாரிர் பின் லோங், பிஆர்எம் வேட்பாளர் ஸ்ரீதரன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.