Home தேர்தல்-14 தொகுதி வலம்: தெலுக் இந்தான்: மண்ணின் மைந்தன் மா சியூ கியோங் வீழ்வாரா?

தொகுதி வலம்: தெலுக் இந்தான்: மண்ணின் மைந்தன் மா சியூ கியோங் வீழ்வாரா?

993
0
SHARE
Ad

தெலுக் இந்தான் – இந்துக்கள் கொண்டாடும் ஆலயத் திருவிழாக்களில், சித்ரா பௌர்ணமி திருவிழாவும் ஒன்று.

மலேசியாவைப் பொறுத்தவரை சித்ரா பௌர்ணமிக்கு நாடு முழுமையிலுமிருந்து மக்கள் அதிக அளவில் கூடுவது தெலுக் இந்தானில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில்தான்.

இந்த முறை கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 ஏப்ரல் 2018-ஆம் நாள் தெலுக் இந்தானில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதோடு, ஒரு வித்தியாசமாக, பொதுத் தேர்தல் வெப்பம் சூழ்ந்திருக்கும் சூழலில் தெலுக் இந்தான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் பிரச்சாரத்திற்காக இங்கே குவிந்திருக்கின்றனர்.

தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி திருவிழா 2018 – படங்கள் உதவி: RAVI JOHN SMITH – http://www.facebook.com/smith.fotografi
#TamilSchoolmychoice

66,487 வாக்காளர்களைக் கொண்ட தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் 19 விழுக்காடு இந்திய வாக்குகள் என்பதுதான் தெலுக் இந்தான் வேட்பாளர்கள் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் குவிந்ததற்கான காரணம்.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் இரண்டு முக்கிய வேட்பாளர்களுமே சீனர்கள் என்பதுதான் இதில் சுவாரசியம். இருப்பினும், சீனர்கள் இந்து ஆலயத் திருவிழாக்களில் கலந்து கொள்வதும், தைப்பூசத் திருவிழாவில் காவடி எடுப்பதும், மலேசியாவில் வழக்கமானதுதான் என்பதால், வேட்பாளர்களின் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகையும் வித்தியாசமாகப் பார்க்கப்படவில்லை.

இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் எதிர்முகங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதுதான்!

சித்ரா பௌர்ணமி திருவிழாவில் மா சியூ கியோங்குக்கு குளிர்பானம் வழங்கி உபசரிக்கும் இங்கா கோர் மிங் – படம்; நன்றி – மலேசியாகினி

பக்காத்தான் வேட்பாளராக தெலுக் இந்தான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் ஜசெகவின் இங்கா கோர் மிங் பக்காத்தான் கூட்டணி சார்பில் சித்ரா பௌர்ணமி திருவிழாவுக்கென ஆலய வளாகத்தில், தண்ணீர் பந்தல் ஒன்றை அமைத்திருந்தார் என்பதோடு, அந்த வழியாக வந்த தனது போட்டியாளர் மா சியூ கியோங்கிற்கு தனது தண்ணீர் பந்தலில் இருந்து குளிர்பானமும் வழங்கி உபசரித்து அரசியல் போட்டிக்கு அப்பாற்பட்ட நல்லுணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி இரத ஊர்வலம் 2018 – படங்கள் உதவி: RAVI JOHN SMITH – http://www.facebook.com/smith.fotografi

மா சியூ கியோங் – கெராக்கான் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும்  தேர்தல்

சரி! சித்ரா பௌர்ணமியை விட்டு விட்டு அரசியலுக்கு வருவோம். தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் நடப்பது என்ன?

மும்முனைப் போட்டி நிலவும் தெலுக் இந்தான் தொகுதியில் 41 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 40 விழுக்காடு சீன வாக்காளர்களும் இருக்கின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டபடி 19 விழுக்காட்டினர் இந்திய வாக்காளர்கள்.

பெரும்பாலான இந்திய வாக்காளர்கள் மா சியூ கியோங்குக்கும், தேசிய முன்னணிக்கும் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்பட்டாலும், பாகான் டத்தோவில் இந்தியர்களுக்கு இறுதிச் சடங்குகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்ற, அங்கு போட்டியிடும் துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி சார்பான  அறிவிப்பு பேராக் இந்தியர்களிடையே கொந்தளிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இது தெலுக் இந்தான் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலிக்கலாம்.

NEGERI PERAK
Parlimen P.076 – TELUK INTAN
NAMA PADA KERTAS UNDI PARTI
NGA KOR MING PKR
DR. AHMAD RAMADZAN PAS
MAH SIEW KEONG BN

 

இதுவரையில் நடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின்படி, சீன வாக்காளர்களிடையே இங்கா கோர் மிங்கிற்கு அமோகமான ஆதரவு பெருகி வருவதாக உள்ளூர் மஇகாவினர் தெரிவிக்கின்றனர்.

கோர் மிங் வென்றால், பக்காத்தான் கூட்டணியும் ஆட்சி அமைத்தால், அவர் அமைச்சராவார் என ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பலத்த கண்டனங்களையும் தோற்றுவித்தது. குவான் எங்கின் ஆணவத்தைக் காட்டுகிறது என சிலர் சாடியிருந்தனர்.

தெலுக் இந்தான் – 2018 வாக்காளர் விவரங்கள்

ஆனால், பாதுகாப்பான தனது தைப்பிங் தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, ஓர் அமைச்சரை எதிர்த்து – ஒரு தேசியக் கட்சியின் தேசியத் தலைவரை எதிர்த்து – கடுமையான போட்டியை கோர் மிங் எதிர்நோக்க முன்வந்திருந்தால், அவருடைய தியாகத்திற்காகவும், துணிச்சலுக்காகவும், கட்சி வழங்கும் வெகுமதி இது என பின்னர் லிம் குவான் எங் தனது அறிவிப்பைத் தற்காத்துப் பேசியிருந்தார்.

தேசிய முன்னணிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட இந்தியர்களின் வாக்குகளையும் கோர் மிங் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மலாய் வாக்காளர்களிடத்தில் அவருக்குப் போதுமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இந்தத் தொகுதியை ஆய்வு செய்த ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஜசெகவின் முகமாக அவர் பார்க்கப்படுவது மலாய் வாக்குகளை அவருக்கு அள்ளித் தராது எனக் கணிக்கப்படும் வேளையில், அவரது அனல் தெறிக்கும் ஆவேசப் பேச்சில் அடிக்கடி தெறிக்கும் சில தகாத வார்த்தைகள், சீன வாக்காளர்களை உற்சாகப்படுத்தினாலும், மலாய் வாக்காளர்களை முகம் சுளிக்க வைக்கின்றன என்கின்றனர் தெலுக் இந்தான் வாசிகளில் சிலர்.

அந்த நாள் ஞாபகம் – 2014-இல் நடைபெற்ற தெலுக் இந்தான் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மா சியூ கியோங் – மற்றும் ஜசெக வேட்பாளர் டயானா சோபியா

போதாக் குறைக்கு பாஸ் கட்சியும் தெலுக் இந்தானில் போட்டியிடுகின்றது. கடந்த முறை நடந்த தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியில் பாஸ் கட்சி அங்கம் வகித்தும், 238 வாக்குகள் பெரும்பான்மையில் மா சியூ கியோங் வெற்றி பெற்றார்.

எனவே, இந்த முறை பக்காத்தானுக்கு செல்லக் கூடிய பாஸ் ஆதரவு வாக்குகள் பாஸ் கட்சிக்கே செல்லும் என்பதால்  அதனால் பிளவுபடும் மலாய் வாக்குகளால் மா சியூ கியோங்கிற்கு சில சாதகங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தெலுக் இந்தானின் மண்ணின் மைந்தராக மா சியூ கியோங் பார்க்கப்படுவதால், அங்கேயே பிறந்து வளர்ந்தவர் – செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் – சீன வாக்குகள் அப்படியே மொத்தமாக ஜசெக வேட்பாளர் பக்கம் சென்று விடாது என்ற நம்பிக்கையையும் தேசிய முன்னணியின் வெளிப்படுத்துகின்றனர்.

மாறாக, கோர் மிங் தெலுக் இந்தானைச் சேர்ந்தவர் அல்ல என்பதும் பொதுத் தேர்தலுக்காகத்தான் அவர் இங்கே களமிறக்கப்பட்டுள்ளார் என்பதும் அவருக்கு சாதகமாக இல்லை.

ஆனால், மகாதீர் பிரச்சாரத்தால் மலாய் வாக்குகளில் ஒரு பிரிவு பக்காத்தான் கூட்டணிக்கு வரலாம் என்பதும் மா சியூ கியோங்குக்கு எதிரான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

கெராக்கான் கட்சிக்கும், அதன் தேசியத் தலைவர் மா சியூ கியோங்குக்கும் இந்தத் தேர்தல் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் சவால் மிக்க, கடுமையான தேர்தலாகும்.

பினாங்கு பக்கம் இனி போக முடியாது என்று கூறும் வண்ணம் அங்கு ஜசெக ஆழமாகக் காலூன்றி விட்டது. மேற்கு மலேசியாவின் மற்ற பகுதிகளில் ஓரிரண்டு தொகுதிகளில் வென்று வருவதன் மூலமே கெராக்கான் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை அதனால் உறுதி செய்து கொள்ள முடிகிறது.

அத்தகைய தொகுதிகளில் ஒன்றுதான் தெலுக் இந்தான்!

அதையும் இந்த முறை இழந்தால் – அதன் பின்னர் கெராக்கான் கட்சியின் எதிர்காலமும் – இங்கு போட்டியிடும் அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் மா சியூ கியோங்கின் அரசியல் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடும்!

-இரா.முத்தரசன்