தெலுக் இந்தான், ஜூன் 1 – அடுத்த சில வாரங்களுக்கு ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) பெரும் தலைவர்கள் தங்களின் மண்டை காய்ந்து போகும் அளவுக்கு, தெலுக் இந்தான் இடைத் தேர்தல் முடிவுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
13வது பொதுத் தேர்தல் வெற்றிகள் ஒருபுறம் இருக்க –
அண்மையில் நடந்து முடிந்த புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் கர்ப்பால் சிங்கின் மகனை நிறுத்தி முதல் முறையாக மலேசிய அரசியலில் தேசிய முன்னணியையே போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடச் செய்த வெற்றிக் களிப்பில் இருக்கும் ஜசெகவிற்கு இது அதிர்ச்சித் தோல்வி மட்டுமல்ல.
மாறாக, அவர்களின் அரசியல் வியூகங்களை மீண்டும் ஒரு முறை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும் அவர்களை உள்ளாக்கி விட்டிருக்கின்றது.
காரணம், கடந்த 13வது பொதுத் தேர்தலில் 7,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தெலுக் இந்தான் தொகுதியை இன்றைக்கு ஜசெக பறிகொடுத்து நிற்கிறது என்றால், நிச்சயம் இந்த தேர்தலில் அவர்கள் கையாண்ட தவறான அணுகுமுறைகள்தான் காரணம்.
புக்கிட் குளுகோர் வெற்றியால் ஏற்பட்ட மமதையால், தெலுக் இந்தான் தொகுதியில் நிச்சயம் வென்று விடுவோம் என்ற அசாத்திய நம்பிக்கையோடு ஜசெக அடுக்கடுக்கான தவறுகளைச் செய்தது.
அதில் முதலாவது வேட்பாளர் தேர்வு!
வேட்பாளர் தேர்வில் தவறான கண்ணோட்டம்
ஜசெகவின் டயானா சோஃபியா அழகும், கவர்ச்சியும், திறமையும் கொண்ட சிறந்த வேட்பாளர்தான்.
ஆனால், ஒரு நகர்ப்புறத் தொகுதிக்கு – கோலாலம்பூர் மாநகர் போன்ற தொகுதிகளுக்கு அவர் மிகப் பொருத்தமான வேட்பாளராக இருந்திருப்பார்.
தெலுக் இந்தான் போன்ற புறநகர்த் தொகுதி ஒன்றுக்கு டயானா பொருத்தமானவர் இல்லை.
அதிலும், தெலுக் இந்தான் நகரிலேயே பிறந்து வளர்ந்த, அந்த வட்டாரத்தின் மிகப் பெரிய சீன வர்த்தகக் குடும்பத்திலிருந்து ஒருவர் தேசிய முன்னணி சார்பாக நிற்கின்றார் என்னும்போது –
அந்த தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வென்றவர் நிற்கின்றார் என்னும் போது –
ஜசெக இன்னும் கொஞ்சம் முன் எச்சரிக்கையோடு வேட்பாளரைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.
ஒன்று, உள்ளூர் சீனப் பிரமுகர் ஒருவரை நிறுத்தியிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், ஏறத்தாழ 20 சதவீத இந்திய வாக்குகள் இருப்பதைக் கவனத்தில் கொண்டு, ஓர் இந்தியர் வேட்பாளரை நிறுத்தியிருந்தால், இந்திய வாக்குகளை அதிகமாகக் கவர்ந்து வெற்றி பெற்றிருக்க முடியும்.
இரண்டும் இல்லாமல், ஒரு மலாய் வேட்பாளரை களத்தில் இறக்கியது ஜசெக செய்த முதல் தவறு.
கடந்த தேர்தல்களில் குலசேகரன், மனோகரன் போன்ற ஜசெகவின் இந்திய வேட்பாளர்கள் தெலுக் இந்தானில் நின்று வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்பதை ஏனோ ஜசெக கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட்டது.
மலாய் வாக்குகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை
மலாய் வாக்குகள் 38 சதவீதம் இருந்தாலும், தெலுக் இந்தான் போன்ற புறநகர்ப் பகுதி மலாய்க்காரர்கள் இன்னும் அம்னோவை விட்டு வெளியே வரவில்லை என்பதையும் ஜசெக அறிந்திருக்க வேண்டும்.
தெலுக் இந்தான் போன்ற பகுதிகளில் பாஸ் கட்சியும் மலாய்க்காரர்களிடையே அவ்வளவாக செல்வாக்கு கொண்டிருக்கவில்லை.
மாநில அரசாங்கத்தை ஆளும் சாம்ரியின் தேசிய முன்னணி அரசாங்கமும் கடுமையாக களத்தில் இறங்கி மலாய் வாக்குகளைத் தற்காக்கும் என்பதையும் ஜசெக யோசித்திருக்க வேண்டும்.
இந்நிலையில், மலாய் வாக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு டயானாவுக்கு வராமல் போக-
உள்ளூர் சீனர்களும், தங்களின் மற்றொரு உள்ளூர் வாசியான மா சியூ கியோங் பக்கம் கணிசமான அளவில் திரும்ப –
தேசிய முன்னணி தெலுக் இந்தானில் வெற்றிக் கனியைப் பறித்திருக்கின்றது.
இந்தியர் வாக்குகள் கிடைக்கவில்லை
பக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணி இந்திய வாக்குகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
இந்திய வாக்காளர்களை தேசிய முன்னணி போன்று சரியாக கணக்கெடுத்து அவர்கள் அணுகுவதில்லை. அவர்களின் தேவைகளையும் ஆராய்ந்து அறிவதில்லை.
எல்லா இந்தியர்களுமே நகர்ப்புற வாசிகள், நன்கு படித்த நடுத்த தர மக்கள் – தேசிய முன்னணி மற்றும் அம்னோ மீது எதிர்ப்பானவர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பக்காத்தான் ராயாட் நினைக்கின்றது.
மக்கள் கூட்டணியின் பல இனக் கொள்கைகள், சீனர்களுக்கும், மலாய்க்காரர்களுக்கும் சாதகமாக, பாதுகாப்பாக இருக்கின்றதே தவிர, இந்தியர்களுக்கு சாதகமாக இல்லை.
சீனர்கள் பொருளாதார ரீதியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் பொருளாதார வலிமை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மலாய்க்காரர்களுக்கு, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பூமிபுத்ரா என்ற அடிப்படையில் உதவிகள் கிடைத்து விடுகின்றது.
இதில் யார் வந்தாலும், இளிச்சவாயர்கள் இந்தியர்கள்தான்!
இந்தியர்களுக்கோ, தமிழ்ப் பள்ளிகள் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய, ஆலயங்களுக்கு மான்யம் அளிக்கவல்ல, தங்களின் சமுதாய நிதிப் பிரச்சனைகளைக்கு தீர்வு காணக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேவை.
அதற்கு மா சியூ கியோங் பொருத்தமானவராக இருந்தார்.
கெராக்கான் கட்சித் தலைவராகவும் இருந்ததால் – உள்ளூர் வாசியாக – நல்ல வசதி படைத்தவராக இருந்ததால் – அவரால் நிறைய செய்ய முடியும் என இந்தியர்கள் நம்பினார்கள்.
அவரது கடந்த கால சேவைகளும் அதற்கு சாட்சியங்களாக முன் நின்றன.
மா சியூ கியோங்கிற்கு அமைச்சர் பதவி அறிவிப்பு உதவி செய்தது
எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னால், மா வென்றால் அவருக்கு அமைச்சர் பதவி என்ற பிரதமர் நஜிப்பின் அறிவிப்பு, நடுநிலை வாக்காளர்களையும், பின்தங்கிய வாழ்க்கைச் சூழலைக் கொண்ட சாதாரண வாக்காளர்களையும் தேசிய முன்னணி பக்கம் சாய்த்தது.
குறிப்பாக இந்தியர்கள், தங்களின் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராகப் போகின்றார் என்றால் அதனால் கிடைக்கப்போகும் சாதகங்களை – இலாபங்களை நிச்சயம் கணக்கெடுத்திருப்பார்கள்.
அதுபோலவே, உள்ளூர் ம.இ.கா தலைவர்களை விசாரித்த போது, இந்த முறை இந்தியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட வாக்களிப்பு மையங்களில் ஏறத்தாழ 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் தேசிய முன்னணி பக்கம் விழுந்தன என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
ம.இ.கா. தலைவர்கள் மீது என்னதான் சேறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் – தூற்றப்பட்டாலும் –
இந்திய சமுதாயம் என்று வரும்போது – தங்களின் அரசாங்கப் பதவிகள் மூலமும் – ம.இ.காவின் கிளைகள், தொகுதிகள் என்ற அடிமட்ட கட்சி அமைப்பின் மூலமும் இந்திய மக்களோடு அணுக்கமான தொடர்புகளை இன்னும் ம.இ.காவினர் வைத்திருக்கின்றார்கள் என்பதையும் பக்காத்தான் ராயாட் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இடைத் தேர்தல் என்று வந்துவிட்டால், இந்திய வாக்காளர்கள் ‘நன்கு கவனிக்கப்படுகின்றார்கள்’ என்பதையும் பக்காத்தான் கட்சியினர் மறந்துவிடக் கூடாது.
அதோடு, நாடு தழுவிய அளவில் இந்திய வாக்காளர்களைக் கவரும் விதத்தில் செயலாற்றக் கூடிய –
அவர்களோடு தொடர்புகளை வைத்துக் கொள்ளக்கூடிய இந்தியத் தலைவர்கள் –
பக்காத்தான் கூட்டணியில் குறிப்பாக ஜசெக – பிகேஆர் கட்சிகளில் இல்லை என்பதையும் அந்தக் கூட்டணியினர் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட – சிந்திக்க முன்வர வேண்டும்.
டயானா குறித்த சர்ச்சைகள் – ஹூடுட் சட்ட எதிர்ப்பு
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் டயானா குறித்து எழுந்த சர்ச்சைகள் ஜசெகவுக்கு சாதகமானதாக இல்லை.
அவர் அம்னோ கலாச்சாரத்தின் வார்ப்பு என்பதும், மாரா கல்லூரியில் படித்தவர் என்பதும், அவரது தாயார் பெர்காசாவில் உறுப்பினராக இருந்தவர் என்பதும் வாக்காளர்கள் மத்தியில் – குறிப்பாக சீனர்கள் மத்தியில் பாதிப்பையே ஏற்படுத்தியது.
அதோடு, தெலுக் இந்தான் தேர்தலுக்கு சில தினங்கள் முன்னர்வரை, பாஸ் கட்சி விடாப்பிடியாக ஹூடுட் சட்டத்தைக்கொண்டு வருவோம் என மல்லுக் கட்டி நின்றது –
அந்த விவகாரத்தை மசீசவும், கெராக்கான் கட்சியும் சரியான முறையில் சீன வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்த்தது –
போன்ற அம்சங்களும் கணிசமான – நடுநிலை சீன வாக்குகளை தேசிய முன்னணி பக்கம் இழுத்தது.
தெலுக் இந்தான் தோல்விக்கான காரணங்களுள் மிக முக்கியமானது ஹூடுட் சட்ட விவகாரம் என்பதை பக்காத்தான் ராயாட் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிகேஆர் கட்சியின் உட்கட்சித் தேர்தல் பிரச்சனை
பிகேஆர் கட்சியில் நடந்து வரும் உட்கட்சித் தேர்தல்களினால், பிளவுண்டு கிடக்கும் அந்தக் கட்சியால் இந்த முறை சரியான முறையில் மலாய் வாக்குகளை ஜசெக பக்கம் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை.
தெலுக் இந்தான் வட்டாரத்தில் பாஸ் கட்சியின் செல்வாக்கு அவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கவில்லை என்பதால் அவர்களாலும் மலாய் வாக்குகளை ஜசெக பக்கம் திருப்ப முடியவில்லை.
இவையும் ஜசெக தோல்விக்கு – டயானா போன்ற மலாய் வேட்பாளரை நிறுத்தியும் மலாய் வாக்குகளைக் கவர முடியாமல் போன நிலைமைக்கு – மற்ற காரணங்கள்!
புக்கிட் குளுகோரில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்ட சாதுரியம்
புக்கிட் குளுகோர் தேர்தலில் போட்டியிடாமல் மசீச-தேசிய முன்னணி ஒதுங்கிக்கொண்டது முதலில் சரியான அரசியல் முடிவல்ல என அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டாலும் –
சாமர்த்தியமாக, அங்கு செலவழித்திருக்கக் கூடிய அரசியல் – பணபல சக்திகளை ஒன்று திரட்டி தெலுக் இந்தானில் கொட்டி –
கடந்த முறை 7,000 வாக்குகளில் இழந்த ஒரு தொகுதியை இந்த முறை தேசிய முன்னணி வென்றெடுத்திருக்கின்றது.
தனது வியூகம் சரிதான் என்பதையும் நிரூபித்திருக்கின்றது.
ஜசெகவும், மக்கள் கூட்டணியினரும் இனியாவது விழித்தெழுந்து கொள்வது – தங்களின் அரசியல் அணுகுமுறைகளை மறு ஆய்வு செய்வது அவர்களுக்கு நல்லது!
-இரா.முத்தரசன்