Home Photo News செல்லியல் பார்வை : ரபிசி ரம்லி : மீண்டும் அரசியலுக்கு திரும்புவது ஏன்? ஏனிந்த வரவேற்பு?

செல்லியல் பார்வை : ரபிசி ரம்லி : மீண்டும் அரசியலுக்கு திரும்புவது ஏன்? ஏனிந்த வரவேற்பு?

658
0
SHARE
Ad

(பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் ரபிசி ரம்லிக்கு கட்சிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் அபரிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏன் அவருக்கும் மட்டும் இந்த உற்சாக வரவேற்பு? அரசியல் அரங்குக்கு திரும்புவதற்கு அவர் கூறும் காரணங்கள் என்ன? தன் பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

சினிமாவிலும் அரசியலிலும் ஒரு சிலர் ஏன் உச்சம் பெறுகின்றனர், புகழ்
பெறுகின்றனர் என்பது யாருக்கும் தெரியாத ஒரு சூட்சுமம்.

மலேசிய அரசியலில் முகமட் ரபிசி ரம்லியும் அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாக
இறங்கியதில்லை. பிகேஆர் கட்சியின் எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும்
கலந்து கொண்டதில்லை.

#TamilSchoolmychoice

இருந்தாலும், நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் துணைத்
தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன் என அவர் அறிவித்தது முதல் கட்சியில்
உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.

கட்சிக்கு வெளியில் இருந்தும் அபரிமிதமான ஆதரவு ரபிசி ரம்லிக்கு பெருகி வருகிறது.

அண்மையில் நூருல் இசாவுடன் இணைந்து முகநூல் பக்கம் வழங்கி ஆதரவாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ரபிசி ரம்லி, தான் மீண்டும் அரசியலுக்குத் திரும்புவது ஏன் என்ற கேள்விக்கான பதிலை அளித்தார்.

எந்தப் பக்கம் வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கான பக்காத்தான் ஹாரப்பான் வாக்காளர்கள் தற்போது மதில் மேல் பூனையாக குழப்ப நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்களின் ஆதரவை பக்காத்தான் பக்கம் திருப்பவே தான் அரசியலில் மீண்டும் ஈடுபட முடிவெடுத்ததாக ரபிசி ரம்லி தெரிவித்திருக்கிறார்.

ஏன் இந்த உற்சாக வரவேற்பு?

அவருக்கு மட்டும் ஏன் இந்த உற்சாக வரவேற்பு? அதற்கு இரண்டு காரணங்களைக்
குறிப்பிட்டுச் சொல்லலாம்.

முதலாவது பிகேஆர் கட்சியில் ஏற்பட்டிருக்கும் தொய்வு நிலை. அன்வாருக்கு
அடுத்த இரண்டாம் கட்டத் தலைவர்களில், உதவித் தலைவராக இருக்கும் நூருல்
இசாவைத் தவிர்த்து வேறு யாரையும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத் தலைவர்களாக பார்க்க முடியவில்லை.

நூருல் இசா அன்வாரின் மகள் என்பதால் இப்போதைக்கு பிகேஆர் கட்சியின்
முக்கியப் பொறுப்பில் அவர் அமர்வது கண்டனங்களை ஏற்படுத்தும். குடும்ப
அரசியல் என்ற குற்றச்சாட்டுகள் எழும்.

அன்வாருக்கு அடுத்த 2-ஆம் கட்டத் தலைவர் யார் என அந்தக் கட்சி
உறுப்பினர்களிடையே எழுந்திருக்கும் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறார்
ரபிசி ரம்லி.

அடுத்தடுத்து மலாக்கா, ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் மோசமான தோல்விகளைச்
சந்தித்து ஓர் இறங்குமுகமான சூழலில் பிகேஆர் தவித்துக் கொண்டிருக்கிறது.

எனவேதான் ரபிசி ரம்லியின் வருகை பிகேஆர் கட்சியில் உற்சாக வெள்ளத்தைக்
கரைபுரளச் செய்திருக்கிறது.

மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, பிரபல்யம்
ஆகியவற்றினால் அன்வாருக்குப் பிறகு கட்சியை வழி நடத்திச் செல்லக்கூடிய
தலைமைத்துவ ஆற்றலும் ஆளுமையும் அவருக்கு இருப்பதாக பெரும்பாலான பிகேஆர் உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

ஊழல் விவகாரங்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர்

ரபிசி ரம்லிக்குக் கிடைத்து வரும் உற்சாக வரவேற்புக்கு இன்னொரு காரணமும் உண்டு.

கடந்த காலங்களில் அவர் துணிச்சலுடன் அரசாங்க ஊழல் விவகாரங்களை
வெளிக்கொண்டு வந்தார்.

வெறும் அரசியல் குற்றச்சாட்டுகளாக அந்த ஊழல்களை முன் வைக்காமல் புள்ளி
விவரங்களோடு தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்தார்.

இதனால், பொதுமக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றார். அத்தகைய நடவடிக்கைகள் மூலம் அவர் கட்டி எழுப்பிய நம்பகத் தன்மைதான் இன்று அவருக்கு கட்சியின் உள்ளேயும் வெளியேயும் கிடைத்துவரும் ஆதரவுக்கான அடிப்படைக் காரணங்கள்.

ரபிசி ரம்லியின் பின்னணி

திரெங்கானு மாநிலத்தைச் சேர்ந்தவர் ரபிசி. சிறந்த மலாய் மாணவர்கள்
கல்வி கற்கும் கல்லூரியான கோலகங்சார் மலாய் கல்லூரியில்தான் அவர்
படித்தார். இதே கல்லூரியில்தான் அன்வார் இப்ராகிமும் முன்னாள் மாணவர்
என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பட்டப் படிப்பை பொறியியல் துறையில் பெற்றார் ரபிசி. தொடர்ந்து கணக்கியல் நிபுணத்துவத் துறையில் பட்டம் பெற்றார்.

பல்கலைக்கழகத்திலேயே அரசியல் ஈடுபாடு காட்டியவர் ரபிசி ரம்லி. 2003 முதல் 2009 வரை பெட்ரோனாஸ் நிறுவனத்தில் அவர் உயர் அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றினார்.

பின்னர், 2009ஆம் ஆண்டு ஃபார்மா நியாகா மருந்து விநியோக நிறுவனத்திலும்
பணிபுரிந்தார்.

அன்வாருக்கு எதிராக நடத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளைக் கண்டு அவருக்காகப்
போராட முன்வந்தார் ரபிசி ரம்லி. பிகேஆர் கட்சியிலும் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.

பெட்ரோனாஸ் நிறுவனத்திலேயே சொகுசான பதவியில் இருந்து கொண்டு அவர்
வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம்.

அதை விட்டு விட்டு அரசியல் போராட்டக் களத்திற்கு – அதுவும்
எதிர்க்கட்சிகளின் தளத்திற்கு – வந்தார். பிகேஆர் கட்சியில் அவரது
திறமையைக் கண்டு அடுத்தடுத்து பதவிகள் வழங்கப்பட்டன.

பிகேஆர் இளைஞர் பகுதி பொருளாளராக 2003இல் நியமிக்கப்பட்டார். கட்சியின்
மத்திய செயலவையிலும் இடம் பெற்றார்.

2010 முதல் 2014 வரை கட்சியில் வியூக இயக்குநராக பதவி வகித்தார்.
தொடர்ந்து கட்சியின் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட்டார்

2018இல் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை எதிர்த்துப்
போட்டியிட்டார்.

அந்த காலகட்டத்தில் அன்வார் சிறையில் இருந்தார். அன்வாரின்
குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாக ரபிசி ரம்லிக்குக் கிடைத்தது. சொற்ப
வாக்கு வித்தியாசத்திலேயே அவர் துணைத்தலைவர் பதவிக்கானப் போட்டியில்
தோல்வியைத் தழுவினார்.

அப்போது முதல் அரசியலில் இருந்து அவர் ஏனோ சில காரணங்களால்
ஒதுங்கியிருக்க ஆரம்பித்தார்.

இன்வோக் (Invoke) மலேசியா என்ற வணிக நோக்கம் அற்ற அரசியல் பிரச்சார
நிர்வாக நிறுவனம் ஒன்றை அவர் 2016இல் தோற்றுவித்திருந்தார். அந்த
அமைப்புக்காகப் பாடுபடப் போவதாகக் கூறி அரசியலிலிருந்து ஒதுங்கப்
போவதாகவும் அறிவித்தார்.

ஒரு காலகட்டத்தில் அவர் மீண்டும் அரசியலுக்குத் திரும்பமாட்டார் என்றுகூட
கருதப்பட்டது. அந்த அளவுக்கு எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து
கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது சமூக ஊடகங்களில் மட்டும் குரல்
கொடுத்து வந்தார்.

ஊழல் விவகாரங்களைத் துணிச்சலுடன் முன்னெடுத்தவர்

அரசியல் களத்தில்கூட, மற்றவர்களைப் போல் தலைவர்களைச் சார்ந்து
அடிவருடியாக அரசியல் நடத்தாமல் துணிச்சலுடன் ஊழல் விவகாரங்களை கையில்
எடுத்தார்  ரபிசி ரம்லி.

அதன் மூலம் அவர் மீதான நம்பகத் தன்மையும் அதிகரித்தது. கட்சியிலும்
மக்கள் மத்தியிலும் அவருக்குச் செல்வாக்குக் கூடியது.

இந்நிலையில் 2013ஆம் ஆண்டில் பாண்டான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட
அவர், 26,729 வாக்குகள் பெரும்பான்மையில் மிகப் பெரிய வெற்றியைப்
பெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரது போராட்டம் சுலபமானதாக இருக்கவில்லை. அரசாங்கம் அவருக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தது.

2012-இல் ஊழல் விவகாரம் ஒன்றில் வங்கித் தொடர்பான ஆவணங்களை
கசியவிட்டதற்காக அவருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் அரசாங்க தலைமைக் கணக்காய்வாளரின் 98 பக்க
அரசாங்க ஆவணத்தை வெளியிட்டதற்காக 18 மாதச் சிறைத்தண்டனை ரபிசிக்கு
விதிக்கப்பட்டது.

இந்த வழக்குகளின் காரணமாக 2018 பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடாமல்
ஒதுங்கிக் கொண்டார். அவருக்குப் பதிலாக பாண்டான் தொகுதியில் அன்வாரின்
மனைவி வான் அசிஸா வான் இஸ்மாயில் போட்டியிட்டார்.

கால ஓட்டத்தில் அந்த வழக்குகளில் இருந்து நீதிமன்றப் போராட்டத்தின் மூலம்
விடுதலையானார் ரபிசி ரம்லி.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ஆவாரா?

பிகேஆர் கட்சியில் அன்வாருக்கு அடுத்தத் தலைவராக அஸ்மின் அலி ஒரு
காலத்தில் பார்க்கப்பட்டார்.

2018 கட்சித் தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி பெற்று பக்காத்தான்
ஹராப்பான் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இடம் பெற்றார் அஸ்மின் அலி.
இருந்தாலும் ஷெரட்டன் நகர்வு மூலம் அவர் கட்சி மாறி, ஆட்சியைக் கவிழ்த்து
வெளியேறியது கட்சியில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது.

ரபிசி ரம்லியின் வரவு அந்த வெற்றிடத்தை நிரப்பும் என
எதிர்பார்க்கப்படுவதால்தான் அவருக்கு இத்தகைய பரவலான ஆதரவு
கிடைத்து வருகிறது.

பிகேஆர் கட்சி அரசியல் அரங்கில் செல்வாக்கு இல்லாத நிலையில் இருக்கிறது
எனக் கூறப்படும் ஒரு காலகட்டத்தில் புது ரத்தம் பாய்ச்சுவது போல –
புத்துயிர் ஊட்டுவது போல – துணைத் தலைவராகப் போட்டியிட
முன்வந்திருக்கிறார் ரபிசி.

அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பிகேஆர் கட்சி மீதான ஆதரவும் நம்பகத்
தன்மையும் மக்களிடையே மேலும் கூடுதலாக அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.