கோலாலம்பூர் – பத்து நாடாளுமன்றத் தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிடும் பிரபாகரனுக்கு ஆதரவாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிகேஆர் கட்சி நடத்திய பிரச்சாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இது குறித்து செந்துல் ஓசிபிடி துணை ஆணையர் ஆர்.முனுசாமி பெர்னாமாவிடம் அளித்திருக்கும் தகவலில், “மாலையில் கூட்டம் நடப்பதாக எங்களுக்குத் தகவல் மட்டுமே தெரிவித்து அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. காரணம், அத்தொகுதியில் அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. அதுமட்டுமின்றி, கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று முனுசாமி தெரிவித்திருக்கிறார்.
மேலும், தேர்தல் விதிமுறைகளின் படி, பிரபாகரனும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெறத் தவறிவிட்டார் என்றும் முனுசாமி குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே, இக்கூட்டம் நடந்தது தொடர்பாக, அமைதிப் பேரணிச் சட்டம் 2012, பிரிவு 9-ன் கீழ், விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தன் மீதான வழக்கு ஒன்றின் காரணமாக, 14-வது பொதுத்தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் பிரபாகரனுக்கு பக்காத்தான் தலைவர்கள் அனுமதியோடு தியான் சுவா நேற்று வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு, செந்துல் யுடிசியில், பிரபாகரனை ஆதரித்து பிகேஆர் சார்பில் நடந்த கூட்டத்தில் தியான் சுவா கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.