Home தேர்தல்-14 “வாக்குகள் இரகசியம்! விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாக்களியுங்கள்” காவல் துறையினருக்கு ஐஜிபி அறைகூவல்!

“வாக்குகள் இரகசியம்! விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாக்களியுங்கள்” காவல் துறையினருக்கு ஐஜிபி அறைகூவல்!

1074
0
SHARE
Ad
ஐஜிபி முகமட் புசி ஹருண்

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் நம்ப முடியாத அளவுக்கு சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று இராணுவத்தினரும், காவல் துறையினரும் தங்களின் வாக்குகளைச் சுதந்திரமாக யாருக்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு அளிக்கலாம் என வெளிவந்து கொண்டிருக்கும் அறிவிப்புகள்தான்.

பொதுவாக இராணுவம், மற்றும் காவல் துறையினரின் வாக்குகளில் இரகசியங்கள் இல்லை, அவர்களின் பெரும்பான்மையான வாக்குகள் மேலிட வற்புறுத்தல் மற்றும் அச்சம் காரணமாக ஆளும் தேசிய முன்னணிக்கே வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது என்ற எண்ணம் நிலவி வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த முறை பக்காத்தான் கூட்டணிக்குத் தலைமையேற்கும் துன் மகாதீர், அனைத்து காவல் மற்றும் இராணுவப் படையினருக்கு, நாட்டின் நிலைமையை விளக்கி, பக்காத்தான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பகிரங்க கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

#TamilSchoolmychoice

இரண்டு நாட்களுக்கு முன்னர் கடற்படையின் தலைவர்  அகமட் கமாருல்ஜமான் அகமட் விடுத்த அறிக்கையில் கடற்படையினர் சுதந்திரமாக, தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என அறிவித்தார். பின்னர் தனது அறிக்கை அரசியலாக்கப்பட்டது குறித்து தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

நேற்று வெள்ளிக்கிழமை காவல் துறையின் தலைவர் (ஐஜிபி) முகமட் புசி ஹருண் விடுத்த அறிக்கையில் வாக்குகள் இரகசியமானவை, எனவே, காவல் துறையினர் தங்களுக்கு விருப்பமான முறையில் சுதந்திரமாக வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தாங்கள் எப்போதும் முடிவு செய்வதில்லை என்றும் முகமட் புசி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எத்தனை வாக்காளர்கள் காவல் துறையில்?

புக்கிட் அமான் – காவல் துறையின் தலைமையகம்

காவல் துறையில் 111,702 வாக்காளர்கள் பதிவு பெற்றிருக்கின்றனர். இவர்கள் முன்கூட்டியே இன்று சனிக்கிழமை (5 மே) காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை வாக்களிக்கத் தொடங்குவர்.

பொதுத் தேர்தல் அன்று காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தங்களின் கடமைகளில் ஈடுபட்டிருப்பர் என்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இவர்களில் 5,660 வாக்காளர்கள் புக்கிட் அமான் எனப்படும் காவல் துறை தலைமையகத்தில் உள்ளனர். எஞ்சிய 106,042 வாக்காளர்கள் நாடு முழுமையிலும் பரந்து விரிந்திருக்கின்றனர்.

புக்கிட் அமானில் வாக்களிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, அனைத்து மாநில காவல் துறை தலைமையக அலுவலகங்களிலும் வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக முகமட் புசி தெரிவித்தார்.

இதற்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுத்த அறிக்கையில், பாதுகாப்புப் படையினரின் நலத்தை தேசிய முன்னணி அரசாங்கம் எப்போதும் பேணி வந்திருப்பதால், அவர்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.