புத்ரா ஜெயா – துன் மகாதீரின் தலைமையிலான புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பதவியேற்றது முதற்கொண்டு நிகழ்ந்து வரும் அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவனங்களின் தலைவர்களும், தலைமைச் செயல் அதிகாரிகளும் பதவி விலகக் காத்திருக்கின்றனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல நிறுவனங்களில் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அரசியல் கட்சிகளின் சார்பாக அரசு நிறுவனங்களில் இயக்குநர்கள் நியமிக்கப்படும் போக்கும் அடியோடு நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து மலேசியாவின் வணிக சூழலும் பெருமளவில் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மின்சார வாரியத்தின் தலைவரான முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ லியோ மோகி, சைம் டார்பி நிறுவனத்தின் தலைவர் முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் கனி ஒத்மான் ஆகியோர் பதவி விலகும் நிறுவனத் தலைவர்களில் முக்கியமானவர்களாவர்.
மேலும் பல இயக்குநர்களும் அடுத்தடுத்து பதவி விலகுவார்கள். பிரதமர் நஜிப் துன் ரசாக் அரசாங்கத்தின் சார்பில் அரசு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் இனிவரும் நாட்களில் பதவி விலகும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படும் புதியவர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும், இயன்ற வரையில் அரசியல் பின்னணி, கட்சி சார்பு இல்லாதவர்களாகவும் இருப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.