ஜெர்லூன், மார்ச் 29 – எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகளிடமிருந்து கெடாவைக் கைப்பற்றினால் அதன் வளர்ச்சியில் தேசிய முன்னணி அரசு முழுக்கவனம் செலுத்தும் என்று அம்னோ தொடர்புக் குழுவின் துணைத் தலைவர் டத்தோ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.
தேசிய முன்னணி அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அங்குள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்புத்தேடி மாற்றிடங்களுக்குச் செல்லாமல் இருக்க வழிவகை செய்யும் என்றார்.
கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கட்சிகள் கெடாவின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யாதது போல் அல்லாமல் தேசிய முன்னணி அவர்களது வாழ்வின் உயர்வுக்குத் தேவையானதைச் செய்யும் என்று முக்ரிஸ் தெரிவித்தார்.
வர்த்தக தொழில்துறை துணை அமைச்சருமான முக்ரீஸ், ஒரே மலேசியா நிகழ்வில் கலந்துகொண்டு மேற்கண்ட தகவல்களை வழங்கியதோடு, ஜெர்லூன் தொகுதியிலுள்ளவர்களுக்கு 100 ரிங்கிட் அன்பளிப்பையும், 189 பள்ளிச்சீருடைகளையும், மீனவர்களுக்கு 206 மீன்பிடி வலைகளையும், 415 பாதுகாப்பு உடைகளையும், 692 உணவுப்பொட்டலங்களையும், 50 மிதிவண்டிகளையும் வழங்கினார்.