அலோர்ஸ்டார் : ஜெனரி சட்டமன்ற உறுப்பினர் முகமட் சனுசி நூர் மீண்டும் கெடா மாநில மந்திரி பெசாராக இன்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் மாநில ஆட்சியாளர் சுல்தான் சாலேஹூடின் சுல்தான் பட்லீஷா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
கெடா மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் இந்தியர்கள் யாரும் போட்டியிடவில்லை. எனவே, கெடா மாநில ஆட்சிக் குழுவில் இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பில்லை.
இந்தியர் சமூகத்திற்கான பிரதிநிதியாக குமரேசன் என்பவரை கடந்த தவணையின்போது மந்திரி பெசாரின் சிறப்பு செயலாளராக பெரிக்காத்தான் அரசாங்கம் நியமித்திருந்தது. இப்போதும் அதே போன்ற நடைமுறை பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மந்திரி பெசாரின் சிறப்பு செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சனுசி, ஜெனரி சட்டமன்றத்திற்கு 16,050 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வேட்பாளர் கிஸ்ரி அபு காசிமைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கெடா மாநிலத்தில் 36 தொகுதிகளில் 33 தொகுதிகளில் பெரிக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றது.
கடந்த 2020 மே மாதத்தில் கெடாவின் 14-வது மந்திரி பெசாராக சனுசி நியமிக்கப்பட்டார்.