Home நாடு கெராக்கானின் கூலிம் சட்டமன்ற உறுப்பினர் கெடா ஆட்சிக் குழு உறுப்பினராகலாம்

கெராக்கானின் கூலிம் சட்டமன்ற உறுப்பினர் கெடா ஆட்சிக் குழு உறுப்பினராகலாம்

388
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 36 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட கெராக்கான் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.

கெடா மாநிலத்தின் கூலிம் தொகுதிதான் அது. வோங் சியா ஜென் அந்தத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட்டு 7,742 வாக்குகள் பெரும்பான்மையில் பக்காத்தான் ஹாரப்பான்-பிகேஆர்  வேட்பாளரைத் தோற்கடித்தார்.

இதைத் தொடர்ந்து கெடா மாநில ஆட்சிக் குழுவில் ஒரே சீனராக – ஒரே முஸ்லீம் அல்லாத ஆட்சிக் குழு உறுப்பினராக – வோங் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்று கெடா மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்ட சனுசி நூர், எந்த இனத்திற்கும் எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று கூறியதோடு, கெராக்கானின் ஒரே சட்டமன்ற உறுப்பினர் ஆட்சிக் கழு உறுப்பினராகப் பொறுப்பேற்கலாம் எனக் கோடி காட்டியுள்ளார்.

2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் இருந்து கெராக்கான் வெளியேறியது.

பெரிக்காத்தான் நேஷனலில் கெராக்கான் இணைந்ததன் மூலம் அது புதிய அரசியல் பலம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இணைந்தது முதல் பாஸ் கட்சியோடு கூட்டணியில் இணைந்திருப்பது குறித்து கெராக்கானின் பெரும்பான்மை சீன உறுப்பினர்கள் அதிருப்திகள் தெரிவித்தனர்.

நடைபெற்ற 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கெராக்கானுக்கு 36 தொகுதிகள் 4 மாநிலங்களில் (கிளந்தான், திரெங்கானு தவிர்த்து) ஒதுக்கப்பட்டன. அவற்றில் கெடா மாநிலத்தில் ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதி – கூலிமில் மட்டும் கெராக்கான் வெற்றி பெற்றது.

பெரிக்காத்தான் கூட்டணிக்குத் தேவைப்பட்ட சீன வாக்குகளை கெராக்கான் பெற்றுத் தர முடியவில்லை.

கெராக்கான் போட்டியிட்ட தொகுதிகளில் தேவைப்பட்ட மலாய் வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனலின் பெர்சாத்து, பாஸ் கட்சிகள் கெராக்கானுக்குப் பெற்றுத் தர முடியவில்லை.

கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ் பெரும்பான்மை மலாய் வாக்காளர்களைக் கொண்ட பாயான் லெப்பாஸ் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு பாஸ் ஆதரவாளர்களாலேயே நிராகரிக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அஸ்ருல் மகாதீர் 1,889 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

\